Bhagavad Gita in Tamil - Chapter 10
ஸ்ரீமத்
பகவத்கீதை
-
அத்தியாயம்-10
-
ஸ்ரீபகவான்
சொன்னது
10.1 மஹாபலசாலியே,
என்னுடைய மேலான
வார்த்தைகளை மீண்டும் கேள். பிரியமான உனது நலம்கருதி அதை நான் சொல்கிறேன்.
-
10.2 என்னுடைய
துவக்கத்தை தேவர் கூட்டங்கள் அறியமாட்டார்கள். ஏனென்றால் நான் தேவர்களுக்கும்
மஹரிஷிகளுக்கும் முற்றிலும் முதல்காரணம்.
-
10.3 யார் என்னை
துவக்கம் இல்லாதவன் என்றும், பிறவாதவன்
என்றும் அறிகிறானோ அவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன். அவன் பாபங்களிலிருந்து
விடுபடுகிறான்
-
10.4,5 புத்தி, ஞானம், மோஹமின்மை, பொறுமை, உண்மை, தமம் (உடலை அடக்குதல்)
சமம் (மனதை அடக்குதல்) சுகம், துக்கம், பயம், பயமின்மை, அபயம், பிறப்பு. இறப்பு, அஹிம்சை, ஸமதா,திருப்தி, தபம், தானம், புகழ், இகழ், இப்படி பலவிதமான தன்மைகள்
உயிர்களுக்கு என்னிடமிருந்தே உண்டாகின்றன
-
10.6 ஏழு மஹரிஷிகள்,
அப்படியே மனுக்கள்
நால்வரும் என் பிரபாவத்தையுடையவர்கள். என்னுடைய மனதில் பிறந்தார்கள். இவ்வுலகில்
உள்ள உயிர்கள் யாவும் அவர்களிடமிருந்தே உண்டாயின
-
10.7 யார் என்னுடைய
இந்த விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி அறிகிறானோ அவன் அசையாத யோகத்தில்
நிலைத்திருப்பான்.இதில் சந்தேகமில்லை
-
10.8 நான் எல்லோருடைய
மூலம். என்னிடமிருந்து எல்லாம் வெளிப்படுகின்றன. இப்படி அறிந்து ஞானிகள் அன்பு
உணர்வோடு பூஜிக்கிறார்கள்
-
10.9 என்மீது
சித்தத்தை வைத்தவர்கள். பிராணனை எனதாக்கி, என்னைப்பற்றி ஒருவருக்கொருவர் விளக்கிக்கொள்பவர்கள்
என்பொழுதும் பேசிக்கொள்பவர்கள், திருப்தியடைபவர்களாயும்,
ஆனந்தமடைபவர்களாயும்
ஆகிறார்கள்
-
10.10 என்றும் யோகம்
பயில்பவர்களுக்கு, அன்புணர்வோடு
பூஜிப்பவர்களுக்கு அந்த புத்தியோகத்தை கொடுக்கிறேன்.அதனால் அவர்கள் என்னை
வந்தடைகிறார்கள்
-
10.11 நான்
அவர்களுக்கு அருள்புரிந்து, அவர்களுக்குள்
வீற்றிருந்து, பிரகாசிக்கின்ற
ஞானதீபத்தினால் அக்ஞானத்திலிருந்து பிறந்த இருளை அகற்றுகிறேன்
-
10.12,13 அர்ஜுனன்
சொன்னது. தாங்கள் மேலான பிரம்மம், மேலான இருப்பு,
மேலான பரிசுத்தம்,
எல்லா ரிஷிகள்
தேவரிஷிகளாகிய நாரதர், அப்படியே அஸிதர்,
தேவலர், வியாசர் போன்றோர் உம்மை
நித்தியமானவர் என்றும் திவ்வியமான புருஷன் என்றும் ஆதிதேவர் என்றும்,பிறவாதவர், எங்கும் வியாபித்தவர்
என்றும் சொல்கிறார்கள். தாங்களும் அப்படியே சொல்லுகிறீர்
-
10.14 கேசவா எனக்கு
எதை சொல்லுகிறீரோ அதுயாவும் உண்மை என்றே மனதிற்கு தோன்றுகிறது. பகவானே உம்முடைய
தோற்றத்தை நிச்சயமாக தேவர்கள் அறிவதில்லை, தானவர்களும் அறியார்
-
10.15 புருஷோத்தமா,
உயிர்களை உருவாக்கியவரே,
உயிர்களுக்கு ஈசனே,
தேவர்களுக்கெல்லாம் தேவனே,
உலகை ஆள்பவரே, உம்மை உம்மால் மட்டுமே
உள்ளபடி அறிய இயலும்
-
10.16 எந்த
விபூதிகளினால் நீர் இந்த உலகங்களை வியாபித்து இருக்கிறீரோ, தெய்வப்பேற்றையுடைய உமது விபூதிகளை
பாக்கியில்லாமல் வர்ணித்தருள்வீராக
-
10.17
யோகியே(கிருஷ்ணா)நான் எப்பொழுதும் உம்மையே சிந்தித்துக்கொண்டு எப்படி உம்மை அடைவது?
பகவானே என்னென்ன
விதங்களில் நீர் சிந்திக்கத்தக்கவர்?
-
10.18 ஜனார்த்தனா,
உம்முடைய யோகத்தையும்
விபூதியையும், மறுபடியும்
விபரமாக சொல்லவேண்டும். ஏனென்றால் உமது அமுதமொழியை கேட்கின்ற எனக்கு தெவிட்டவில்லை
-
10.19 ஸ்ரீபகவான்
சொன்னது. நல்லது, குருகுலத்தில்
சிறந்தவனே, தெய்வத்தன்மையுடைய
என் விபூதிகளை மீண்டும் சொல்கிறேன். ஏனென்றால் என்னுடைய விபூதிக்கு முடிவில்லை
-
10.20 குடாகேசா,
எல்லா பிராணிகளின்
ஹிருதயத்தில் இருக்கின்ற பரமாத்மா நான். மேலும் உயிர்களின் ஆதியும் நடுவும்
முடிவும் நானே
-
10.21 நான்
ஆதித்தியர்களுள் விஷ்ணு, ஒளிர்பவைகளுள்
கதிர் நிறைந்த ஞாயிறு. மருந்துக்களில் மரீசியாகவும் நட்சத்திரங்களில் நான்
சந்திரன்
-
10.22 வேதங்களுள் நான்
சாமவேதம், தேவர்களுள் நான்
இந்திரன். இந்திரியங்களில் நான் மனம். உயிர்களின் உணர்வும் நானே.
-
10.23 ருத்திரர்களுள்
சங்கரனாகவும், யக்ஷராக்ஷசர்களில்
குபேரனாகவும், வஸுக்களில்
அக்கினியாகவும், மலைகளுள்
மேருமலையாகவும் நான் இருக்கிறேன்.
-
10.24 குந்திபுத்ரா,
புரோகிதர்களுள்
முக்கியமான பிரஹஸ்பதி நான் என்று அறிந்துகொள். சேனைத்தலைவர்களுள் நான்
ஸ்கந்தனாகவும், நீர் நிலைகளுள்
சமுத்திரமாகவும் இருக்கிறேன்.
-
10.25 மஹரிஷிகளுள்
நான் பிருகு, வாக்குகளுள்
ஓரெழுத்தாகிய ஓம் என்ற பிரணவம் நான். யக்ஞங்களுள் நான் ஜபயக்ஞம், அசையாதவற்றுள் ஹிமாலயமாக
இருக்கிறேன்.
-
10.26 மரங்கள்
எல்லாவற்றினுள் நான் அரசமரம், தேவரிஷிகளுள்
நான் நாரதர், கந்தர்வர்களுள்
சித்திரரதன்,சித்தர்களுள்
நான் கபிலமுனி
-
10.27 குதிரைகளுக்குள்
அமிர்தத்தோடு உண்டான உச்சைசிரவஸ் என்னும் குதிரை. அரச யானைகளுக்குள் ஐராவதம்
என்னும் யானை. மக்களுக்குள் அரசனாகவும் என்னை அறிந்துகொள்
-
10.28 ஆயுதங்களுக்குள்
நான் வஜ்ராயுதம். பசுக்களில் காமதேனுவாகவும் இருக்கிறேன். பிரஜைகளை
பிறப்பிக்கின்றவர்களுள் நான் மன்மதன், பாம்புகபளில் நான் வாசுகியாக இருக்கின்றேன்
-
10.29 நாகங்களுள் நான்
அனந்தன், ஜலதேவதைகளுள்
வருணன், பித்ருக்களில்
அரியமான், அடக்கியாள்பவர்களுள்
நான் யமனாக இருக்கின்றேன்
-
10.30 தைத்தியர்களுள்
நான் பிரஹ்லாதன், கணிப்பவர்களுள்
காலன், விலங்குகளுள்
சிம்மம், பறவைகளுள்
கருடனாகவும் நான் இருக்கின்றேன்
-
10.31
தூய்மைப்படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயதம் பிடிப்பவர்களுள் ராமனாகவும், மீன்களுள் மகரமாகவும், நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கின்றேன்
-
10.32 அர்ஜுனா,
படைக்கப்பட்ட
பொருட்களுக்கு துவக்கமும், இடையும், முடிவும் நானே.
வித்தைகளுக்குள் ஆத்மவித்தை. வாதம் செய்பவர்களின் வாதமாகவும் நான் இருக்கிறேன்
-
10.33 எழுத்துக்களில் நான் அகரம், கூட்டுச்சொற்களுள் நான்
இருசொற்கூட்டு (இரண்டு சொற்களை கூட்டி எழுதுதல் உதாரணம் ராமன்,கிருஷ்ணன் இரண்டையும்
சேர்த்து ராமகிருஷ்ணன் என்று புதிய சொல்) காலங்களில் முடிவற்ற காலம் நான். எல்லா திசைகளிலும் (எங்கும்) கர்மபலனை
வழங்குபவன் நானே
-
10.34 அனைத்தையும்
அழிக்கும் மரணம் நான். செல்வர்களில் வளரும்செல்வம் நான், பெண்மைகளுள் நான் புகழ், ஸ்ரீ,வாக்கு, நினைவு,அறிவு, துணிவு,பொறுமை நான்
-
10.35 மேலும் நான் ஸாம
கானங்களில் பிருஹத்ஸாமம், சந்தங்களில்
காயத்ரீ, மாஸங்களில்
மார்கழி, பருவங்களில்
வசந்தகாலம் நான்
-
10.36 வஞ்சகர்களுடைய
சூதாட்டம் நான். தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான். வெற்றியாகவும், முயற்சியாகவும், சாத்விகர்களுடைய சத்துவ குணமாகவும் நான்
இருக்கிறேன்
-
10.37 விருஷ்ணிகளுள்
நான் வாசுதேவன், பாண்டவர்களுள்
தனஞ்ஜயன், முனிவர்களுள்
வியாசர், கவிஞர்களுள் நான்
சுக்கிரன்
-
10.38
தண்டிப்பவர்களுள் நான் செங்கோல், வெற்றி
வேண்டுபவர்களிடம் நான் நீதி. ரகசியங்களுள் நான் மௌனம், ஞானிகளுடைய ஞானமும் நானே
-
10.39 அர்ஜுனா,
எல்லா உயிர்களுக்கும்
வித்து எதுவோ, அது நான்.
என்னையன்றி இயங்குவது இயங்காததுமான பூதங்கள்(உலகம்) எதுவும் இருக்காது
-
10.40 எதிரியை
வாட்டுபவனே, என் திவ்விய
விபூதிகளுக்கு முடிவில்லை. என் விபூதி விரிவுகளில் ஒரு சிறிது என்னால்
சொல்லப்பட்டது
-
10.41 மஹிமையும்
அழகும் வலிமையும் உடையது எது எதுவோ அதெல்லாம் என் பிரபையின் ஒரு பகுதியில்
உண்டானது என்று அறிக
-
10.42 அர்ஜுனா,
இதை பலவிதமாகப்
பகுத்தறிவதால் உனக்கு ஆவதென்ன? எனது ஓர்
அம்சத்தினால் உலகு அனைத்தையும் தாங்கியிருக்கிறேன்
-
அத்தியாயம் பத்து
நிறைவுற்றது
No comments:
Post a Comment