Friday, 27 October 2017

Bhagavad Gita in Tamil - Chapter 11

Bhagavad Gita in Tamil - Chapter 11


ஸ்ரீமத்பகவத்கீதை
-
அத்தியாயம் -11
-
அர்ஜுனன் சொன்னது
-
11.1 என்னைக் என்னை காத்து அருள்வதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்மதத்துவத்தை பற்றிய மொழியால் என் மயக்கம் ஒழிந்தது
-
11.2 கமலக்கண்ணா, உயிர்களின் பிறப்பு. இறப்பு விரிவாக உம்மிடம் என்னால் கேட்கப்பட்டன, உமது முடிவற்ற மஹிமையும் கேட்கப்பட்டது
-
11.3 பரமேசுவரா. நீங்கள் உம்மைப்பற்றி சொல்லியவை முற்றிலும் சரியே. புருஷோத்தமா உமது ஈசுவர வடிவத்தைக் காண விரும்புகிறேன்
-
11.4  பிரபுவே, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று எண்ணுவீராயின், யோகேஷ்வரா, உமது அழிவற்ற உருவத்தை காட்டிருள்வீராக
-
11.5 ஸ்ரீ பகவான் சொன்னது
பலவகைப்பட்ட, பல நிறங்களும் வடிவங்களும் உடைய எனது தெய்வீக உருவங்களை நூறுநூறாய், ஆயிரம் ஆயிரமாய், இனிப் பார் பார்த்தா
-
11.6 ஆதித்யர்களையும், வஸுக்களையும்,ருத்திரர்களையும், அச்வினிகளையும் அங்ஙனம் மருத்துக்களையும் பார்த்தா பார், முன்பு காணாத அதிசங்கள் பலவற்றைப் பார்
-
11.7 அர்ஜுனா, எனது இவ்வுடலில் ஒன்று சேர்ந்துள்ள அசையும் , அசையாத உலகங்களை முழுவதையும் பார், மேலும் பார்க்க விரும்பும் வேறு எதையும் இப்பொழுது காண்
-
11.8 ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். எனது ஈசுவர யோகத்தைப் பார்
-
11.9 ஸஞ்ஜயன் சொன்னது
வேந்தே, யோகத்திற்குப் இறைவனான ஹரியானவர் இங்ஙனம் உரைத்த பின்பு பார்த்தனுக்கு தம் மேலாம் ஈசுவர வடிவத்தைக் காட்டியருளினார்
-
11.10  அந்த வடிவம் அநேக முகங்கள், அநேக கண்கள் உடையது. பல அதிசயக் காட்சிகள் கொண்டது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது
-
11.11 திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது, திவ்விய கந்தம் பூசியது. பெரும் வியப்பூட்டுவது. பிரகாசமுடையது, முடிவற்றது, எங்கும் முகமுடையது
-
11.12 வானத்தில் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒரேநேரத்தில் உதித்ததுபோல், அது அம் மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும்
-
11.13 அப்பொழுது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவ தேவனுடைய தேகத்தில் ஒன்றுகூடியிருப்பதை பாண்டவன் பார்த்தான்
-
11.14 பின்பு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தேவனைத் தலையால் வணங்கிக் கைக்கூப்பிக் கூற தொடங்கினான்
-
11.15 அர்ஜுனன் சொன்னது
தேவா, உமது உடலில் தேவர்களெல்லாரையும், உயிர்த்தொகுதிகள் அனைத்தையும், தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவையும் சகல ரிஷிகளையும் திவ்யமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன்
-
11.16 உலக வடிவுடைய உலகநாயகா, எண்ணற்ற கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது அளவில்லா உருவத்தை எங்கும் பார்க்கிறேன். மேலும் உமது முடிவையோ இடையையோ துவக்கத்தையோ காணமுடியவில்லை
-
11.17 கிரீடம் தரித்து, கதை தாங்கி .சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப்பிளம்பாய், காண்பதற்கரியவராய், சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உள்ள உம்மை நான் எங்கும் காண்கிறேன்
-
11.18 தாம் அழியாப் பரம்பொருள்,அறியத்தகுந்தவர், இவ்வுலகுக்கு ஒப்பற்ற உறைவிடம் நீர், மாறாதவர், ஸநாதன தர்ம ரக்ஷகர், என்னென்றுமுள்ள பரமாத்மா தாம் என என்னால் அறியப்படுகிறீர்
-
11.19 ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவற்ற சக்தியுடையவரும், எண்ணற்ற கைகளை உடையவரும், சந்திர சூரியர்களைக் கண்களாக உடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், உமது தேஜஸினால் உலகம் யாவையும் எரிக்கின்றவரும் ஆகிய உம்மை காண்கிறேன்
-
11.20 மஹாத்மாவே, விண் மண் உலகின் இடைவெளியும் மற்ற திசைகள் யாவும் உம்மாலே நிரம்பப்பெற்றிருக்கின்றன. உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகும் நடு நடுங்குகிறது
-
11.21 இந்த வானவர்  எல்லோரும் உன்னிடம் புகுகின்றனர். சிலர் அஞ்சிக் கைகூப்பி நின்னைப் புகழ்கின்றனர். மஹரிஷி சித்தர் கூட்டத்தார் வாழ்கவென்று நிறைபுகழ் புரிந்து நின்னைப் போற்றுகின்றனர்
-
11.22 உருத்திரர்,ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர், விசுவேதேயர், அசுவினிதேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இவர்கள் கூடி வியப்படைந்து உம்மையே பார்க்கிறார்கள்
-
11.23 நெடுந்தோளாய், பல முகங்கள், கண்கள், பல கைகள், துடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
-
11.24 விஷ்ணுவே. வான் அளாவிப் பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய கனல் வீசும் விசாலக் கண்களையுடைய உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காணவில்லை
-
11.25 தேவர் தலைவா, அச்சமூட்டும் கோரப் பற்களுடன் ஊழித் தீக்கு ஒப்பான உமது முகங்களைக் கண்டதும் எனக்கு திசைகள் தெரியவில்லை. அமைதியும் அடையந்திலேன். ஜகந்நிவாஸ, அருள்புரிய
-
11.26,27 திருதராஷ்டிர புத்திரர் எல்லோரும் பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனும், பீஷ்மர், துரோணர்,சூதபுத்திரர்களுடன், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் பயங்கரமான கோரப்பற்களையுடைய உமது வாய்க்குள் பரபரப்புடன் பிரவேசிக்கின்றனர். சிலர் பொடிபட்ட தலைகளோடு உமது பல் இடுக்குளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்
-
11.28 பெருக்கெடுத்து விரைந்தோடும் பல நதிகள் , கடலை நோக்கிப் பாய்வது போன்று, யாண்டும் வெந்தழல் வீசும் உமது வாய்க்குள் இவ்வையக வீரர்கள் புகுகின்றனர்
-
11.29 நாசமடைவதற்கு விட்டில்பூச்சிகள் வெந்தழலில் விரைந்து வீ்ழ்வதுபோல், உலக மக்கள் நாசமடைவதற்கே உம் வாய்க்குள் நுளைகின்றனர்
-
11.30 வெங்கதிர் வாய்களால் உலகனைத்தையும் விழுங்கி எல்லா பக்கத்திலும் நக்கி ருசி பார்க்கிறீர். விஷ்ணுவே, உமது கொடுஞ்சுடர்கள் வையகம் முழுவதையும் கதிர்களால் நிரப்பி சுடுகின்றன
-
11.31 பயங்கர மூர்த்தியாகிய தாம் யார் என்று எனக்கு இயம்பும். உம்மை வணங்குகிறேன். தேவர் தலைவா, அருள்புரிக. முதல்வனாகிய தம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உம்செயல் எனக்கு விளங்கவில்லை
-
11.32 ஸ்ரீ பகவான் சொன்னது
-
உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். உலகங்களைச் சம்ஹாரம் செய்ய புறப்பட்டிருக்கிறேன். நீ போரிலிருந்து பின்வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழமாட்டார்கள்
-
11.33 ஆகையால் நீ எழுந்திரு, புகழை பெறு, எதிரிகளை வென்று செல்வம்நிறைந்த ராஜ்யத்தை அனுபவி. இவர்கள் எல்லோரும் ஏற்கனவே என்னால் கொல்ப்பட்டிருக்கிறார்கள். இடது கையால் அம்பு எய்தும் வீரா, நீ நிமித்தமாத்திரம் இரு
-
11.34 என்னால் கொலையுண்ட துரோணரையும், பீஷ்மரையும்,ஜயத்ரதனையும், கர்ணனையும் அங்ஙனம் மற்ற போர்வீரர்களையும் நீ கொல். அஞ்சி வருந்தாதே, போரில் பகைவர்களை வெல்லுவாய், போர்புரி
-
11.35 ஸஞ்ஜயன் சொன்னது
கேசவருடைய இம்மொழிகேட்டுக் அர்ஜுனன், நடுங்கி கைக்கூப்பி நமஸ்கரித்து அஞ்சி நன்கு வணங்கி, மீண்டும் கிருஷ்ணரிடம் கூறினான்
-
11.36 அர்ஜுனன் சொன்னது
ஹரிஷீகேசா, உமது புகழில் உலகம் இன்புற்று மகிழ்கிறது, ராக்ஷசர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள். சித்தர் கணங்கள் எல்லாரும் உம்மை வணங்குகிறார்கள். இவையாவும் பொருத்தமானவைகள் தான்
-
11.37 மஹாத்மாவே, அந்தமில்லாதவரே, தேவேசா, ஜகந்நிவாசா, பிரம்மாவுக்கும் பெரியவரே, முதற்காரணமே உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்கமாட்டார்கள்? தோன்றியதும் தோன்றாமலும் அவ்விரண்டுக்கும்  அப்பாற்பட்டதும் அழியாப்பொருளும் நீரே
-
11.38 எண்ணில்லா வடிவங்களையுடையோனே, முதற்பொருளே! ஆதிநாயகா இவ்வுலகுக்கு மேலான இருப்பிடமும் தாமேயாவீர். அறிபவரும், அறியப்படுபொருளும், அருட்பெருநிலமும் ஆவீர். உம்மால் உலகம் யாவும் நிறைந்துள்ளது
-
11.39 வாயு,யமன்,அக்கினி,வருணன்,சந்திரன். பிரஜாபதி,முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவர் நீர். உமக்கு பன்முறை நமஸ்காரம்.ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரம்
-
11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும் பின்புறத்திலம் நமஸ்காரம். எல்லா பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த பராக்கிரமத்தையும் உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறீர். ஆதலால் நீரே யாவுமாயிருக்கிறீர்
-
11.41,42 உமது இப்பெருமையை அறியாது, கவனமின்றி அன்பால் தோழன் என்று கருதி ஏ கிருஷ்ணா, ஏ யாதவா ஏ கூட்டாளிஎன்று பணிவின்றி எது பகரப்பட்டதோ, அச்சுதா! விளையாடிய பொழுதும், படுத்திருந்த பொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உணவருந்துகையிலும், தனித்தோ பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும்,ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப்பட்டீரோ. அதையெல்லாம், பெருந்தன்மையுடன் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
-
11.43 ஒப்பற்ற பெருமையுடையவரே, தாம் இந்த சராசர லோகத்துக்குத் தந்தை, போற்றுதற்குரியவரும் குருவுக்கு குருவும் ஆகின்றீர். மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மைவிட பெரியவர் யார்?
-
11.44 ஆதலால். தேவா, நான் உடலால் வீழ்ந்து வணங்கிப் போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தைபோன்றும் தோழனுக்கு தோழன் போன்றும், காதலிக்கு காதலன் போன்றும் பொறுத்தருளக்கடவீர்
-
11.45 தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்தவனாயிருக்கிறேன் மேலும் மனது அச்சத்தால் நடுங்குகிறது. முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காட்டுக. தேவேசா, ஜகந்நிவாஸா, அருள் புரிக
-
11.46 முன்போலவே கிரீடமும் கதையும் கையில் சக்கரமும் உடையவராய் உம்மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கைகளையுடைய விசுவமூர்த்தியே நான்னு கைகளுடைய அந்த வடிவத்தில் மட்டும் இருப்பீராக
-
11.47 ஸ்ரீபகவான் சொன்னது
அர்ஜுனா, அருள் நிறைந்த என்னால் யோகவலிவைக்கொண்டு இந்த ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலான விசுவரூபம் உனக்குக் காண்பிக்கப்பட்டது. உன்னைத் தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை
-
11.48 குருகுலப் பெருவீரா, மனுஷ்ய லோகத்தில் உன்னைத்தவிர வேறு யாராலும் இவ்வடிவத்தை காணவில்லை, வேதம் ஓதி அறிவதாலும், யாக்ஞத்தாலும், தானங்களாலும், கிரியைகளாலும், உக்கிர தவங்களாலும்  இவ்வடிவத்தை காண முடியாது
-

11.49  இப்படிப்பட்ட எனது கோர ரூபத்தைக்கண்டு உனக்கு கலக்கமும் மயங்கிய மனநிலையும் வேண்டாம். அச்சம் நீங்கி. மகிழ்ந்த மனத்துடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக
-
11.50 ஸஞ்ஜயன் சொன்னது
வாசுதேவர் இங்ஙனம் அர்ஜுனனுக்கு கூறிய பின்பு தமது சொந்த வடிவத்தை அப்படியே காண்பித்தார். மஹாத்மாவானவர் இனிய வடிவெடுத்து அஞ்சினவனைத் திரும்பவும் தேற்றினார்
-
11.51 அர்ஜுனன் சொன்னது
ஜநார்தனா, உமது இந்த இனிய மானிட வடிவம் கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பை அடைந்தவனாய் இருக்கின்றேன்
-
11.52 ஸ்ரீபகவான் சொன்னது
தரிசிப்பதற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்கத் தேவர்களும் எப்பொழுதும்  விரும்புவார்கள்
-
11.53 நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நான் வேதங்களாலும் தவத்தாலும் தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்
-
11.54 எதிரிகளை வாட்டவல்ல அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் காணவும் அடையவும் முடியும்
-
11.55 பாண்டவா, எனக்காகக் கர்மம் செய்கிறவனும், என்னைக் குறிக்கோளாகக்கொண்டு, என்னிடத்து பக்தி செலுத்துபவனும், பற்ற்றவனும் எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பற்றவனும் எவனோ அவன் என்னை அடைகிறான்
-

பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது

1 comment:

  1. Casino bonus codes | TrickTactoe
    No 토토 축구중계 부띠끄 bonus codes for the best casino bonus codes The Casino 토토 픽 넷마블 bonus codes 영앤 리치 토토 are 놀이터 not for new players, 토토중계 just new players. As you can see below, you can also

    ReplyDelete

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture ...