Friday, 10 November 2017

Bhagavad Gita in Tamil - Chapter 1

Bhagavad Gita in Tamil - Chapter 1

ஸ்ரீமத்பகவத்கீதை
-
அத்தியாயம்-1
-
திருதராஷ்டிரர் சொன்னது
-
1.1 ஓ ஸஞ்சயா! தர்ம சேத்திரமாகிய குரு சேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்?
-
1.2  ஸஞ்சயன் சொன்னது
அப்பொழுது ராஜாவாகிய துர்யோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்தும் (துரோண) ஆச்சாரியரை அணுகி சொன்னான்
-
1.3 ஆச்சாரியரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்
-
1.4,5,6 இங்கே சூரர்களாகவும், பெரிய வில்லாளிகளாகவும், யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமானவருமான யுயுதானனும், விராடதேசத்தரசனும், மகாரதனாகிய துருபததேசத்து அரசனும், திருஷ்டகேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசிராஜனும்,புருஜித் என்பவனும், குந்தி போஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைகியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமையுடைய படைத்திருக்கும்  உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடியிருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் மகாரதர்களேயாவர்
-
1.7 பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப்பற்றி உமக்குத்  தகவல் தெரிவித்தற்பொருட்டு சொல்லுகிறேன்
-
1.8 தாங்களும், பீஷ்மரும்,கர்ணனும் போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாசாரியரும், அச்வத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்
-
1.9 மேலும் எல்லோரும் என்பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாயும் பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும் யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர்
-
1.10 பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவுகடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்குள் அடங்கியது
-
1.11 படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு எல்லோரும் பீஷ்மரையே காப்பாற்றுக
-
1.12 வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் , துரியோதனனுக்கு உற்சாகத்தை ஊட்ட உரக்க சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்
-
1.13 பிறகு சங்குகளும், பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது.
-
1.14 பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவனும் தங்கள் தெய்வீக சங்குகளை உரக்க ஊதினார்கள்
-
1.15 ஹிருஷீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவதத்தம் என்ற சங்கை ஊதினான். பெருவினையாற்றுபவனாகிய பீபசேனன் பௌண்ட்ரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான்
-
1.16 குந்தியின் புதல்வன் ராஜாயுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம்,மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்
-
1.17 விற்படையில் தலைசிறந்த காசிராஜனும், மகாரதிகனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராட தேசத்தரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்
-
1.18 மண்ணாள்பவனே! துருபதனும், திரௌபதியின் புதல்வர்களும், தோள்வலிமையுடையவனாகிய சுபத்திரையின் மகனும் ஆக எல்லோரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்
-
1.19 மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது
-
1.20  அரசே! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தாரைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்கும் முன் வில்லை ஏந்திக்கொண்டு, கிருஷ்ணனிடம் இச்சொல்லை உரைத்தான்
-
1.21,22 அர்ஜுனன் சொன்னது
அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையில் என் தேரை நிறுத்துக. இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டும் என்பதையும், போரை விரும்பி முன் நிற்பவர்கள் யார் என்பதையும் கவனிக்கிறேன்
-
1.23 புல்லறிவாளனாகிய துரியோதனனுக்கும்ப் மகிழ்ச்சி தரும் பொருட்டு, போர்புரிய இங்கு திரண்டு நிற்போரை நான் காணவேண்டும்
-
1.24,25 ஸஞ்ஜயன் சொன்னது
திருதராஷ்டிரரே குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷீகேசர் இரண்டு சேனைகளினிடையில் பீஷ்மத் துரோணர்களுக்கெதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களை பார் என்று கூறினார்
-
1.26 அங்கே இரண்டு படைவீரர்களில் இருக்கும் தந்தையரையும்,பாட்டன்மாரையும், ஆச்சாரியர்களையும், மாமன்மார்,அண்ணன்,தம்பிகளையும்,மக்களையும்,பேரன்மார்களையும்,அன்பர்களையும் அவன் பார்த்தான்
-
1.27 குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லாரையும் உற்றுப்பார்த்துப் பேரிரக்கம் படைத்தவனாய் பதட்டத்துடன் இவ்வாறு கூறினான்
-
1.28 அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, போர்புரிவதற்கு கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன,வாயும் வறள்கிறது
-
1.29 என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டீவம் நழுவுகிறது. உடலெல்லாம் தோல்எரிகிறது
-
1.30 கேசவா, என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது. கேடுடைய சகுணங்களையும் காண்கிறேன்
-
1.31 கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காணவில்லை. வெற்றியையும், ராஜ்யத்தையும்,இன்பங்களையும் நான் விரும்பவில்லை
-
1.32,33,34 கோவிந்தா, யாக்காக நாம் ராஜ்யத்தையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ ந்த ஆச்சாரியர்கள்,தந்தையர்,மக்கள்,பாட்டன்மார்,மாதுலர்,மாமனார்,பேரர்,மைத்துனர்,சம்பந்திகள் முதலானவர்கள் உயிரையும் செல்வத்தையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர். நமக்கு (இவர்களை கொன்றபின் கிடைக்கும்)  ராஜ்யத்தால்,போகத்தால் அல்லது வாழ்வதால் என்ன பயன்?
-
1.35 மதுஸுதனா, நான் கொல்லப்படினும்,மூவுலகை ஆளுவதாக இருந்தாலும் இவர்களை கொல்லமாட்டேன். மண்ணிற்காக(ராஜ்யத்திற்காக) இவர்களை கொல்வதா?
-
1.36 ஜநார்தனா, திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப்போகிறது? இந்த பாபிகளை கொல்வதால் நமக்கு பாபமே வந்தடையும்
-
1.37 ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்லுதல் நமக்கு தேவையில்லாதது. மாதவா, உறவினர்களைக் கொன்று நாம் இன்புற்றிருப்பது எப்படி?
-
1.38,39 ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும்,நண்பனை கொல்வதால் வரும் பாதகத்தையும் பார்க்கவில்லை. குல நாசத்தால் உண்டாகும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் ஏன், ஜநார்தனா, இப்பாபத்திலிருந்து பின்வாங்கக்கூடாது?
-
1.40 குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது
-
1.41 அதர்மம் மிகுந்தால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா, மாதர் கற்பிழந்தால் ஜாதிக்கலப்பு ஏற்படும்
-
1.42 கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து அழிகின்றனர் (பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள் கைவிடப்படுவார்கள்)
-
1.43 குலநாசகர்கள் செய்யும் வர்ணக்கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிக்கப்பட்டுவிடும்
-
1.44 ஜநார்தனா, குல தர்மத்தை இழந்தவர் நரகத்தில்  பல காலம் வசிக்கின்றனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
-
1.45 அரசு சுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாபத்தைச் செய்ய இருந்தோம். அந்தோ!
-
1.46 எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் பிடித்து , திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்லுவார்களானால் அதுவே எனக்கு பெரும் நன்மையாகும்
-
1.47 ஸஞ்ஜயன் சொன்னது
 இங்ஙனம் சொல்லி, அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டு துயரம் நிறைந்த மனத்தை உடையவனாய், அர்ஜுனன் தேர்த் தட்டில் உட்கார்ந்தான்
-
அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது

No comments:

Post a Comment

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture ...