Friday, 27 October 2017

Bhagavad Gita in Tamil - Chapter 4

Bhagavad Gita in Tamil - Chapter 4

ஸ்ரீமத்பகவத்கீதை
-
அத்தியாயம்-4

-
4.1 ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
நான் விவஸ்வானுக்கு இந்த அழிவில்லாத யோகத்தை உபதேசித்தேன். விவஸ்வான் மனுவுக்கு உபதேசித்தார். மனு, இஷ்வாகுவுக்கு உபதேசித்தார்
-
4.2 அர்ஜுனா, இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜரிஷிகள்(ராஜாவாக இருந்து ரிஷிகளானவர்கள்) அறிந்திருந்தார்கள். இவ்வுலகில் அந்த யோகமானது நெடுங்காலமாகிவிட்டதால் மறக்கப்பட்டுவிட்டது.
-
4.3 என்னுடைய பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாய் என்பதால் இந்த பழைய யோகமானது இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இது மேலானது. அனைவராலும் புரிந்துகொள்ள முடியாதது
-
4.4 அர்ஜுனன் சொன்னது. உம்முடைய பிறப்பு பிந்தியது. விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீங்கள் ஆதியில் இந்த யோகத்தை உரைத்தேன் என்கிறீரே. இதை எப்படி புரிந்துகொள்வது?
-
4.5 ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது, அர்ஜுனா, எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கடந்துபோய்விட்டன. நான் அவைகள் எல்லாவற்றையும் அறிகிறேன். நீ அறியமாட்டாய்
-
4.6 பிறப்பு அற்றவனாக இருந்தாலும் , தோற்றத்திற்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும் , ஈஸ்வரனாக (உயிர்களை ஆள்பவனாக) இருந்தாலும், என் பிரகிருதியை வசப்படுத்திக்கொண்டு, என் மாயையினால் அவதரிக்கிறேன்.(பிரகிருதி என்பது சாங்கிய தத்துவத்தில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தத்துவம்)
-
4.7 பரதவம்சத்தில் பிறந்தவனே, எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக்கொள்கிறேன்
-
4.8 நல்லோரை பாதுகாக்கவும், தீயோரை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், யுகந்தோறும் அவதரிக்கிறேன்
-
4.9 அர்ஜுனா, யார் என்னுடைய இந்த திவ்யமான பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிகிறானோ, அவன் உடலைவிட்டு மறுபடியும் பிறப்பை அடைவதில்லை. என்னை அடைகிறான்.
-
4.10 ஆசை, அச்சம், குரோதம் நீங்கியவனாய் என்மயமாய் , என்னை அடைக்கலம் புகுந்தவர்களாய், புனிதர்களாய், பலர் என் இயல்பை அடைந்தார்கள்
-
4.11 யார் என்னை எப்படி அழிபடுகிறார்களோ,அவர்களுக்கு நான் அப்படியே(அவர்கள் விரும்பியபடியே) இருக்கிறேன். பார்த்தா மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னுடைய மார்க்கத்தையே(எல்லா மார்க்கமும் இறைவனுடையது) பின்பற்றுகிறார்கள்
-
4.12 கர்மங்களுடைய பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை(ஒளியுடலில் வாழும் முன்னோர்கள்) வணங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வுலகில் கர்மபலன் விரைவில் கிடைக்கிறது
-
4.13  குணம் மற்றும் செய்யும் தொழிலை பொறுத்து நான்கு வர்ணங்கள்(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) என்னால் படைக்கப்பட்டது. அதற்கு நான் கர்த்தா (நானே உருவாக்கினேன்) எனினும், என்னை படைப்பை கடந்தவன்(பிரம்மம்) என்றும் கர்த்தா அல்ல(உருவாக்கியவன் நான் அல்ல) என்றும் அறிந்துகொள்.
-
4.14 கர்மங்கள் என்னை தொடுவதில்லை. எனக்கு கர்மபலனில் ஆசை இல்லை. யார் என்னை இப்படி அறிகிறானோ(கிருஷ்ணரை உள்ளபடி அறிபவன்) அவன் கர்ங்களினால் பந்தப்படுவதில்லை
-
4.15 இங்ஙனம் அறிந்து, முற்காலத்து முக்தர்களால் கர்மம் செய்யப்பட்டது. ஆகையால் நீயும் முன்னோர்களால் முற்காலத்தில் செய்யப்பட்ட கர்மத்தை செய்.
-
4.16 கர்மம் எது, செய்யக்கூடாத கர்மம் எது என்றும், இன்னும் இதுகுறித்து ஞானிகள்கூட குழப்பமடைகிறார்கள். எதை அறிந்து கேடுகளிலிருந்து விடுபடுகிறாயோ அந்த கர்மத்தை உனக்கு சொல்கிறேன்.
-
4.17 ஏனென்றால் கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும், விலக்கப்பட்ட கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செய்யக்கூடாத கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். கர்மத்தின்போக்கை அறிவது கடினம்
-
4.18 யார் செய்யவேண்டிய கர்மத்தில், செய்யக்கூடாத கர்மத்தையும், செய்யக்கூடாத கர்மத்தில் செய்யவேண்டிய கர்மத்தையும் (நன்மையில் தீமையையும், தீமையில் நன்மையையும்) காண்கிறானோ அவன், மனிதர்களுள் புத்திமான். அவன் யுக்தன் ஏற்கனவே எல்லா கர்மங்களையும் செய்தவன்.
-
4.19 யாருடைய சகல கர்மங்களும் ஆசையும், விருப்பமும் அற்றதாக இருக்குமோ, யாருடைய கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டனவோ, அவனை பண்டிதன் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
-
4.20  கர்மபலனில்  ஆசையை துறந்து, எப்பொழுதும் திருத்தியுடன், எதையும் சாராமல், கர்மத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவன் எதையும் செய்பவன் அல்ல
-
4.21 ஆசையற்றவன், மனதையும் உடலையும் அடக்கியவன், பொருட்களையெல்லாம் துறந்தவன், வெறும் உடலைக்கொண்டு செயல்புரிபவன் பாபத்தை அடைவதில்லை.
-
4.22 தற்செயலாய் கிடைப்பதில் திருப்தியடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமையில்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் மனதை நடுநிலையில் வைத்தவன், கர்மம் செய்தாலும் பந்தப்படுவதில்லை
-
4.23 பற்றில்லாதவனுடைய, முக்தனுடைய,ஞானத்தில் உறுதிபெற்ற மனத்தை உடையவனுடைய, யக்ஞத்திற்காக (தன்னிடம் உள்ளதை பலன் கருதாமல் கொடுத்தால் அது யக்ஞம்)  கர்மம் செய்பவனுடைய, எல்லா கர்மங்களும் கரைந்துபோகின்றன
-
4.24 அர்ப்பணம் செய்தல் பிரம்மம்ஹவிஸ் (யாக நெருப்பில் இடப்படும் நெய்) முதலியவை பிரம்மம், பிரம்மமாகிய அக்கினியில் பிராமணர்களால் (பிரம்மத்தை உணர்ந்தவர்களால்) கொடுக்கப்படுகிறது. பிரம்மத்தில்  நிலைநிறுத்தி செய்யும் கர்மம் செய்யும் அவனால் பிரம்மமே அடையப்படுகிறது.
-
(யக்ஞம் என்பது தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பிரதிபலன் கருதாமல்  கொடுத்தல்)
-
4.25 சில யோகிகள் தேவதைகளுக்கு யக்ஞத்தை செய்கிறார்கள். இன்னும் சிலர் பிரம்மமாகிய அக்கினியில் ஆத்மாவைக்கொண்டு யக்ஞம் செய்கிறார்கள்
-
4.26 அடக்குதல் என்ற அக்கினியில், காது முதலிய இந்திரியங்களை (ஐந்து இந்திரியங்களையும் அடக்குதல்) ஹோமம் செய்கிறார்கள்.மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்கினியில் ஹோமம் செய்கிறார்கள்
-
4.27 இன்னும் சிலர் ஞான ஒளிவிடுகின்ற மனத்தை, தன்னிடம் அடக்குதல் என்ற யோகத்தீயில் எல்லாவிதமான இந்திரிய கர்மங்களையும் (ஐந்து இந்திரியங்கள் மூலம் நடக்கும் கர்மங்களையும்) பிராண கர்மங்களையும் அஹுதியாக கொடுக்கிறார்கள்.
-
4.28 அப்படியே சிலர் பொருட்களை யக்ஞம் செய்பவர்களாகவும், சிலர் உடலை அடக்கி யக்ஞம் செய்பவர்களாகவும், யோகத்தை யக்ஞம் செய்பவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்கள் சாஸ்திரம் மூலம் கற்ற ஞானம் ஆகியவற்றை யக்ஞமாக செய்கிறார்கள்
-
4.29 அப்படியே  மற்றவர்கள் அபானனில் பிராணனையும், பிராணனில் அபானனையும் ஹோமம் செய்கிறார்கள்
பிராண அபான வாயுக்களின் போக்கை தடுத்து பிராணயாமம் செய்வதில் ஈடுபடுகிறார்கள்
(நாசி துவாரம் வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜனுக்கு அபானன் என்று பெயர். வெளியே வரும் கார்பன்-டை-ஆக்சைடுக்கு பிராணன் என்று பெயர்)
-
4.30 சிலர் முறையாக உண்பவர்களாய் பிராணனை பிராணனில் ஆஹுதியாக கொடுக்கிறார்கள். யக்ஞத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யக்ஞங்களால் பாபம் நீங்கப்பெற்றவர்களாகிறார்கள்
-
4.31 அர்ஜுனா, யக்ஞத்தில் மீதமிருக்கும் (மற்றவர்களுக்கு கொடுத்துபோக மீதியிருப்பதை) அமிர்தத்தை (உணவை) உண்பவர்கள் நித்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை. மற்ற உலகங்களும் கிடையாது
-
4.32 இப்படி வேதத்தில் பலவிதமான யக்ஞங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவையாவும் கர்மத்திலிருந்து உண்டானவை என்று அறிந்து முக்தியடைவாயாக
-
4.33 எதிரிகளை வாட்டுபவனே, பொருட்களைக்கொண்டு செய்யும் யக்ஞத்தைவிட, ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் யக்ஞம் மேலானது. பார்த்தா, உலகில் உள்ள கர்மம் எல்லாம் ஞானத்தில் முற்றுப்பெறுகிறது
(மற்றவர்களுக்கு பொருட்களை தானம் செய்வதைவிட ஆன்மீகதானம் உயர்வானது)
-
4.34 பணிந்தும், கேட்டும்,பணிவிடைசெய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள். தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்
--
4.35 பாண்டவா, ஞானத்தை அறிந்து மறுபடியும் இப்படி மயக்கமடையமாட்டாய். அப்போது எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும், அப்படியே என்னிடத்திலும் பார்ப்பாய்
-
4.36 எல்லா பாபிகளைவிடவும் அதிக பாபவம் செய்தவனாக இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானம் என்ற படகினால் கடந்துசெல்
-
4.37 அர்ஜுனா, சுடர்விட்டு எரியும் தீயானது விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ, அப்படியே ஞானத்தீயானது எல்லா கர்மங்களையும்(பாங்களையும்) சாம்பலாக்குகிறது
-
4.38 இவ்வுலகில் ஞானத்திற்கு ஒப்பானது, தூய்மையானது வேறெதுவும் இல்லை. காலப்போக்கில் யோகத்தில் வெற்றியடைந்தவன், தன் உள்ளத்தில் தானாகவே இருக்கும் அந்த ஞானத்தை அறிகிறான்
-
4.39 முயற்சியுடையவன், மேலானதில்(பிரம்மத்தில்) மனதைவைத்து, இந்திரியங்களை அடக்கி ஞானத்தை பெறுகிறான். ஞானத்தை அடைந்து வெகுவிரைவில் சாந்தி அடைகிறான்
-
4.40 அறிவற்றவன், முயற்சியில்லாதவன் சந்தேகப்படுபவன் அழிவடைகிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமும் இல்லை பரலோகமும் (மேல் உலகம்) இல்லை. சுகமும் இல்லை
-
4.41 அர்ஜுனா, யோகத்தினால் கர்மங்களை துறந்தவன், ஞானத்தினால் சந்தேகங்களை அகற்றியவன், ஆத்ம சொரூபத்தில் (தன்னில்தானாக) நிலைத்திருப்பவனை கர்மங்கள் கட்டுப்படுத்துவதில்லை
-
4.42 ஆகையால் பாரதாஹிருதயத்தில் இருக்கின்ற ஆத்மாவைப்பற்றிய சந்தேகம் அஞ்ஞானத்தால் உண்டாகிறது. அதை ஞானவாளினால் வெட்டி யோகத்தை கைக்கொண்டு எழுந்திரு
--
நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது
-
www.hindumatham.in


1 comment:

  1. Nice, HeartiestThanks, Kindly correct the major word mistake in 4.11

    ReplyDelete

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture ...