Bhagavad Gita in Tamil - Chapter 3
ஸ்ரீமத்பகவத்கீதை
-
அத்தியாயம்-3
-
அர்ஜுனன் சொன்னது
-
3.1 கேசவா, கர்மத்தைவிட ஞானம் மேலானது என்று நீர் கூறுவீரானால், அப்பொழுது ஏன்
என்னை இந்த பயங்கரமான கர்மத்தில் ஈடுபட தூண்டுகிறீர்?
-
3.2 முரண்பட்ட வார்த்தைகளை பேசி நீர் என் புத்தியை
குழப்புவதாக நினைக்கிறேன். எதனால் நான் சிறப்பை அடைவேனோ, அந்த ஒன்றை
நிச்சயமாக சொல்லும்
-
3.3 ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
பாபமற்றவனே! இவ்வுலகில் சாங்கியர்களுக்கு ஞானயோகம் என்றும், யோகிகளுக்கு
கர்மயோகம் என்றும் இரண்டுவிதமான நன்னெறிகள் என்னால் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது
-
3.4 மனிதன் வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பதால் கர்மமற்ற
நிலையை (பிரம்மத்தை)அடைவதில்லை. வெறுமனே
சந்நியாசம் (கர்மத்தை துறப்பது) பெறுவதால் நிறைநிலையை அடைவதுமில்லை
-
3.5 எப்பொழுதும், கணப்பொழுதேனும் யாரும் கர்மம் செய்யாமல் சும்மா
இருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியிலிருந்து(இயற்கையிலிருந்து) உதித்த குணங்களால்(சத்வம்,ரஜஸ்,தமஸ்), ஒவ்வொரு உயிரும்
தன் வசமின்றி(தானாக) கர்மம் செய்விக்கப்படுகிறது
-
3.6 யார்(சந்நியாசி) கர்மேந்திரியங்களை அடக்கி, இந்திரியார்த்தங்களை
மனதால் எண்ணிக்கொண்டிருக்கிறானோ, அவன் மூடன். பொய்யொழுக்கம் உடையவன் என்று சொல்லப்படுகிறான்.
-
3.7 அர்ஜுனா, ஆனால் யார், இந்திரியங்களை மனத்தினால் அடக்கி, பற்றற்று, கர்மேந்திரியங்களைக்
கொண்டு கர்மயோகம் செய்கிறானோ, அவன் மேலானவன்
-
3.8 நீ நித்திய கர்மத்தை செய். ஏனென்றால் கர்மம் செய்யாமல்
இருப்பதைவிட கர்மம் செய்வது சிறந்தது. கர்மம் செய்யாதிருந்தால் உன்னுடைய உடலைகூட
பாதுகாக்க முடியாது
-
3.9 யக்ஞத்திற்கான கர்மத்தை தவிர மற்ற கர்மத்தினால் இந்த
உலகம் கட்டுப்பட்டிருக்கிறது. குந்தியின் மைந்தா, அதனால் பற்றற்று கர்மத்தை
நன்கு செய்
(கர்மம் மூன்றுவகை 1.பறித்தல் 2. பங்கிடுதல் 3. படைத்தல்.
மற்றவர்களிடமிருந்து பறித்து வாழும் மிருகங்கள் முதல்வகை. கிடைத்ததை அனைவருக்கும்
பங்கிட்டு கொடுக்கும் மனிதர்கள் இரண்டாம் வகை. தன்னிடம் உள்ள அனைத்தையும்
மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் மகான்கள் மூன்றாவதுவகை. இந்த மூன்றாவது நிலைதான்
யக்ஞம்)
-
3.10 ஆதியில் ப்ரஜாபதியானவர், யக்ஞத்தோடுகூட பிரஜைகளை
படைத்து, இதனால் பலவாக
பெருகுங்கள். இது உங்களுக்கு
காமதேனு(கேட்டதை தரும் காமதேனு என்ற பசுபோல்) போல் இருக்கும் என்றால்
-
3.11 இந்த யக்ஞத்தால் தேவர்களை வாழச்செய்யுங்கள். அந்த
தேவர்கள் உங்களை வாழச்செய்வார்கள். ஒருவரை ஒருவர் பேணி, மேலான நன்மையை
அடையுங்கள்
-
(தேவர்கள் என்பவர்கள்,முன்பு
மனிதர்களாக வாழ்ந்து, அதிக புண்ணியம் செய்து,தன்வாழ்க்கையை பிறருக்காக தியாகம்
செய்தவர்கள்.இறந்தபின் ஒளியுடலில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு நன்மை
செய்வார்கள். பின்பு புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் மனிதர்களாக பிறப்பார்கள். இந்த
தேவர்களை வாழவைக்க யாகங்கள் செய்வார்கள். யாகத்தில் தேவர்களுக்கு பிரியமான
உணவுவகைகள் போன்றவை படைக்கப்படும்.பின்பு அவைகள் மற்றவர்களுக்கு பகிர்ந்து
அளிக்கப்படும். தேவர்களுக்கு படைத்தபிறகே மற்றவர்கள் உண்ணும் பழக்கம்
முற்காலத்தில் இருந்தது. அதன் பிறகு தேவர்கள் வழிபாடு மனிதர்களுக்கு பெரும்
சுமையாக மாறியது. தேவர்களுக்கு படைப்பதற்காக பல உயிர்பலிகள் நடைபெற்றன. புத்தர்
காலத்தில் இவைகள் தடைசெய்யப்பட்டன. அதன்பிறகு தேவர்களுக்கு உணவு படைப்பது
நின்றுபோனதால், அவர்கள் ஆயுள்
முடிந்துபோனது.கிருஷ்ணரின் கருத்துப்படி மனிதர்கள் தான் ?தேவர்களை
வாழவைத்தவர்கள். முற்காலத்தில் இருந்த
இந்திரன், வருணன்
போன்றவர்கள் தற்காலத்தில் இல்லை. ஆனால் நம்முடன் வாழ்ந்து மறைந்த மக்களின்
மதிப்பைபெற்ற தலைவர்கள் தேவர் நிலைக்கு உயர்ந்துள்ளார்கள்.தற்காலத்தில் மக்கள்
அந்த தலைவர்களின் பிறந்தநாள்களை கொண்டாடிவருகிறார்கள். கிருஷ்ணரது காலத்தில்
தேவர்கள் வழிபாடு சிறப்பாக இருந்திருப்பது தெரிகிறது. கிருஷ்ணரே ஒருமுறை இந்திரனை
வழிபடவேண்டாம், நமக்கு வேண்டிதை
தரும் கோவர்த்தன மலையை வழிபடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த கண்ணோட்டத்தில்
பார்த்தால் இயற்கை சக்திகளான
நிலம்,நீர், காற்று,வெப்பம்,வெளி போன்றவைதான்
மனிதர்கள் வாழ்வதற்கு ஆதாரமானவை. இவைகள் மாசுபடாமல் , இவைகளை பேணி
பாதுகாக்க வேண்டும்.இனிவரும் பாடல்களில் தேவர்கள் என்று வரும் இடங்களில் இயற்கை
சக்திகள் என்ற பொருளில் இவைகளை பார்த்தால் நன்றாக புரியும்)
-
3.12 யக்ஞத்தினால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு இஷ்டமான
போகங்களைத்தருவார்கள். அங்ஙனம் அவர்களால் தரப்பட்டவைகளை, அவர்களுக்கு
திருப்பி அளிக்காமல், தான் மட்டும்
அனுபவிப்பவன் திருடனே
-
3.13 யக்ஞம் செய்தபிறகு எஞ்சியிருப்பதை உண்கின்ற நல்லவன்
பாபத்திலிருந்து விடுபடுகிறான். ஆனால் தங்களுக்காக மட்டும் சமைத்து உண்பவர்கள்
பாபத்தை அடைகிறார்கள்.
-
3.14 உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. மழையிலிருந்து
உணவு உண்டாகிறது. யக்ஞத்திலிருந்து மழை உண்டாகிறது. யக்ஞம் கர்மத்திலிருந்து
உண்டாகிறது.
-
3.15 கர்மம் வேதத்திலிருந்து உண்டாகிறது. வேதம்(அறிவு)
அழிவில்லாததிலிருந்து(ப்ரம்மத்திலிருந்து) உண்டாகிறது என்று அறிந்துகொள். ஆகையால்
எங்கும் நிறைந்துள்ள வேதம்,எப்பொழுதும்
யக்ஞத்தில் நிலைபெறுகிறது
-
3.16 பார்த்தா,யார்
இவ்வுலகில் இவ்விதம் இயங்கிக்கொண்டிருக்கும் சக்கரத்தை பின்பற்றுவதில்லையோ
அவன் பாபவாழ்க்கை வாழ்பவன். அவன் இந்திரியங்களில் பொருந்தியவனாய் வீணே வாழ்கிறான்.
-
3.17 ஆனால் யார், ஆத்மாவில்(தன்னில்) இன்புற்று
ஆத்மாவில்(தன்னில்) மட்டும் திருப்தியடைந்து, ஆத்மாவில்
(தன்னில்) சந்தோஷமடைந்தவனாய் இருக்கிறானோ, அவனுக்கு
செய்யவேண்டிய கடமை எதுவும் இல்லை
-
3.18 அவனுக்கு இவ்வுலகில் கர்மம் செய்வதால் பிரயோஜனம்
எதுவும் இல்லை. கர்மம் செய்யாமல் இருந்தாலும் நஷ்டம் எதுவும் இல்லை. மேலும் அவன்
எந்த உயிர்களையும் ஏதாவது பிரயோஜனத்திற்காக சார்ந்திருப்பதும் இல்லை
-
3.19 ஆகையால் பற்றற்றவனாய் எப்பொழுதும் செய்யவேண்டிய நித்திய
கர்மத்தை நன்குசெய். ஏனென்றால் பற்றற்று கர்மத்தை செய்யும் மனிதன் மேலானதை
அடைகிறான்
-
3.20 ஜனகர் முதலானவர்கள் கர்மத்தாலேயே முக்தியை
அடைந்தார்கள். உலகத்தை நல்வழியில் நடத்தவேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு
கர்மத்தை செய்ய கடமைப்பட்டிருக்கிறாய்
-
3.21 மேலானவர்கள் எதை
எதை செய்கிறார்களோ மற்ற மனிதர்கள் அதையே பின்பற்றுவார்கள். அந்த மேலானவன் எதை
பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது
-
3.22. பார்த்தா, எனக்கு
செய்யவேண்டிய கடமை எதுவும் இல்லை.மூன்று உலகங்களிலும், இன்னும் அடையாத
ஒன்றை இனி அடையவேண்டும் என்ற அவசியம் கொஞ்சமும் இல்லை.ஆயினும் கர்மம்
செய்துகொண்டேயிருக்கிறேன்
-
3.23 பார்த்தா, நான் எப்பொழுதும்
சோர்வின்றி கர்மத்தில் ஈடுபடாவிட்டால், நிச்சயம் மனிதர்கள் என்னைப்போல் கர்மம்
செய்யாமல் இருக்கவே விரும்புவார்கள்.
-
3.24 நான் கர்மம்
செய்யாவிட்டால் இந்த உலகங்கள் அழிந்துபோகும். தேவையற்ற குழப்பத்தை விளைவித்து, மக்களை
கெடுத்தவனாவேன்
-
3.25 பார்த்தா,கர்மத்தில்
பற்றுள்ளவர்களாய் அறிவற்றவர்கள் எப்படி கர்மம் செய்கிறார்களோ, அப்படி ஞானி
பற்று இல்லாதவனாய், உலகத்தை
நல்வழியில் நடத்த விருப்பம் உள்ளவனாய், கர்மம் செய்ய வேண்டும்.
-
3.26 ஞானியானவன், அறிவற்றவர்களான
கர்மத்தில் பற்றுள்ளவர்களை குழப்பக்கூடாது. யுக்தன்( யோகம் கைகூடப் பெற்றவர்), எல்லா
கர்மங்களையும் நன்கு தெரிந்துகொண்டு மற்றவர்களையும் கர்மத்தில் ஈடுபடுத்தவேண்டும்.
-
3.27
பிரகிருதியின்(இயற்கையின்) குணங்களால்
எப்போதும் கர்மங்கள் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மதியிழந்தவர்கள் “நான் கர்மங்கள்
செய்கிறேன்” என்று
நினைக்கிறான்.
-
3.28 ஆனால், அர்ஜுனா, குணகர்மத்தை(குணத்தின்
போக்கை) அறிந்த தத்துவவாதியானவன், குணங்கள்(சத்வம்,ரஜஸ்,தமஸ்) குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து, அதில்(இயற்கையில்)
பற்றுவைப்பதில்லை.
-
3.29
பிரகிருதியினுடைய குணங்களால்
மோகமடைந்தவர்கள், குணங்களின்
செயல்களில் பற்றுவைக்கின்றனர். அந்த அறிவற்ற மந்த புத்தியினரை தெளிந்தஅறிவுடைய
ஞானிகள் குழப்பக்கூடாது
-
3.30 எல்லா
கர்மங்களையும் என்னிடத்தில் (இறைவனிடத்தில்) அர்பணித்து ஆத்மாவில் சித்தத்தை
வைத்து, ஆசையற்றவனாய், நான் செய்கிறேன்
என்ற உணர்வில்லாதவனாய், மனம்
அடங்கப்பெற்றவனாய் போர்புரிவாயாக
-
3.31 எந்த மனிதர்கள்
என்னுடைய இந்த வழியை(எல்லா கர்மத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்தல் என்ற வழி)
சிரத்தையுடன், பொறாமைப்படாதவனாய்
எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள்கூட கர்மங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
-
3.32 யார் என்னுடைய
இந்த வழியை இகழ்பவர்களாய்,
பின்பற்றி
நடப்பதில்லையோ எல்லாவிதத்திலும் மூடர்களாய், விவேகமில்லாதவர்களான அவர்கள் நஷ்டப்பட்டவர்கள்
என்று அறிந்துகொள்
-
3.33 ஞானியும்கூட
தன்னுடைய பிரகிருதிக்கு ஏற்றபடியே நடக்கிறான். உயிர்கள் அவர்களுக்கு ஏற்ற
பிரகிருதியின்படி நடக்கின்றன. உயிர்களை (தங்கள் இயல்பின்படி நடக்கவிடாமல்) தடைசெய்வதால் என்ன செய்யமுடியும்?(அவர்களை
மாற்றமுடியாது)
-
3.34. இந்திரியங்களுக்கு, இந்திரிய
விஷயங்களில் விருப்பு-வெறுப்புகள் ஏற்படுகின்றன. (யோகி)அவைகளின் வசம் சென்றுவிடக்கூடாது. அவ்விரண்டும்
நிச்சயமாக அவனது எதிரிகள்
-
3.35 நன்கு செய்யப்படும் பிறருடைய தர்மத்தை
காட்டிலும்(பிறருடைய தர்மத்தை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் அதை பின்பற்றாமல்), குறையுடையதாயினும்
தன்னுடைய தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது.
தன்னுடைய தர்மத்தில் மரணமடைவது சிறந்தது. பிறருடைய தர்மமானது(அவனுக்கு)
பயம்தருவதாகும்
-
3.36 அர்ஜுனன் சொன்னது. கிருஷ்ணா, அப்படியானால், இந்த புருஷன்
விருப்பமின்றி பலவந்தமாய் ஏவப்பட்டவன்போல் எதனால் தூண்டப்பட்டவனாக பாபத்தை
செய்கிறான்?
-
3.37 ஸ்ரீகிருஷ்ணர்
சொன்னது. ரஜோகுணத்தில் உதித்த இந்த காமமும்,கோபமும் எதையும் உண்ணவல்லது. பெரும்பாபமுடையது.
இங்கே இதை விரோதி என்று தெரிந்துகொள்
-
3.38 எப்படி
நெருப்பானது புகையினால் மூடப்பட்டிருக்கிறதோ, கண்ணாடி அழுக்கினாலும், கர்பத்தில்
இருக்கும் குழந்தை கர்ப்பபையினாலும் மூடப்பட்டிருக்கிறதோ, அப்படியே காமம், குரோதத்தினால்
இது(ஞானம்) மூடப்பட்டிருக்கிறது.
-
3.39 குந்தியின்
மைந்தா, ஞானியின் நித்திய
எதிரியும், காமமே வடிவெடுத்த, நிரப்ப முடியாத, திருப்தியடையாத
இதனால்(காமம்,குரோதம்)
ஞானமானது மூடப்பட்டிருக்கிறது
-
3.40 இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவை
அதற்கு(காமம்,குரோதம்)
இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இவைகளால் ஞானத்தை மறைத்து தேகத்தில் இருப்பவனை
மயக்குகிறது.
-
3.41 ஆகையால் அர்ஜுனா, நீ முதலில் இந்திரியங்களை
அடக்கி, ஞானத்தையும், ஞான
விக்ஞானத்தையும் அழிக்கின்ற பாபவடிவமுள்ள இந்த (காமம்,குரோதத்தை)
உறுதியுடன் ஒழித்துவிடு
-
3.42 இந்திரியங்கள்
மேலானவை என்று சொல்கிறார்கள். இந்திரியங்களைவிட மனம் மேலானது, மனத்தைவிட புத்தி
மேலானது. ஆனால் புத்தியைவிட அவன் (உடலில் குடியிருப்பவன்) மேலானவன்
-
3.43 அர்ஜுனா. இங்ஙனம்
புத்தியைவிட மேலானதை அறிந்து, தன்னைத்தானே அடக்கி காமவடிவானதும், வெல்வதற்கு
கடினமானதுமான எதிரியை அழித்துவிடு
-
No comments:
Post a Comment