Bhagavad Gita in Tamil - Chapter 5
ஸ்ரீமத்
பகவத்கீதை
அத்தியாயம்-5
-
5.1 அர்ஜுனன்
சொன்னது. கிருஷ்ணா, கர்மங்களை
துறக்கவும் (சந்நியாசம்) மறுபடியும் அதை
செய்யவும் (யோகமார்க்கத்தை கடைபிடிக்கவும்) சொல்லுகிறீர். இவ்விரண்டில் எது
சிறந்ததோ, நிச்சயிக்கப்பட்ட
அந்த ஒன்றை எனக்கு சொல்லும்
-
5.2 ஸ்ரீகிருஷ்ணர்
சொன்னது. சந்நியாசம், யோகம் இரண்டும்
சிறப்பானதுதான், என்னினும்
கர்மசந்நியாசத்தைவிட(கர்மத்தை துறப்பதைவிட) கர்மயோகம் (கர்மத்தை செய்வது) மேலானது
-
5.3
பெருந்தோளுடையவனே, யார் விருப்பு
வெறுப்பு இல்லாதவனோ, அவன் நித்திய
சந்நியாசி என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் இருமைகளற்றவன் (இன்பம்- துன்பம்,
லாபம்-நஷ்டம் போன்றவை)
எளிதில் பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
-
5.4
குழந்தைகள்தான் சாங்கியத்தையும் (சந்நியாச மார்க்கம்) யோகத்தையும் (கர்மமார்க்கம்)
வெவ்வேறானவை என்று பேசுவார்கள். பண்டிதர்கள் அவ்வாறு பேசுவதில்லை. எதையாவது ஒன்றை
உறுதியாக கடைபிடிக்கிறவன் இவ்விரண்டினுடைய பலனையும் பெறுகிறான்
-
5.5 சாங்கியர்
எந்தநிலையை அடைவார்களோ, யோகியரும் அதையே
அடைவார்கள். யார் சாங்கியத்தையும், யோகத்தையும்
ஒன்றாக காண்கிறானோ அவனே உண்மையை காண்பவன்
-
5.6
தோள்வலிமையுடையவனே கர்ம யோகத்தை செய்யாமல், சந்நியாசத்தை அடைவது எளிதல்ல. ஆனால் யோகயுக்தன்
(யோகத்தில் நிலைபெற்றவன்) முனிவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்
-
5.7 கர்மயோகத்தை
கடைபிடிப்பவன் தூய மனதையுடையவன், உடலை வென்றவன்
இந்திரியங்களை ஜயித்தவன், எல்லா
உயிர்களையும் தனதாக காண்பவன் கர்மம் செய்தாலும் அதில் கட்டுப்படுவதில்லை
-
5.8,9 யுக்தன்,
தத்துவத்தை அறிந்தவன்
பார்த்தாலும், கேட்டாலும்,
தீண்டினாலும், நுகர்ந்தாலும், அருந்தினாலும், நடந்தாலும், உறங்கினாலும், சுவாசித்தாலும், பேசினாலும், உபாதைகளை கழித்தாலும்,
பிடித்தாலும், கண்விழித்தாலும், கண்மூடினாலும் கூட
இந்திரியங்கள், இந்திரியார்த்தங்களில்
செல்கின்றன என முடிவுசெய்து, நான் ஒன்றையும்
செய்யவில்லை என்று நினைப்பான்
-
5.10 யார்
பிரம்மத்தை அடைக்கலம் புகுந்தவனாய், பற்றுதலை துறந்து, கர்மங்களை செய்கிறானோ அவனை, தாரையிலையில் தண்ணீர் ஒட்டாததுபோல் பாபம் ஒட்டுவதில்லை
-
5.11 யோகிகள்
பற்றைத்துறந்து தன்னை தூய்மைப்படுத்துவதற்காக, வெறும் உடலால் மனதால், புத்தியால், இந்திரியங்களால் கர்மம் செய்கிறார்கள்
-
5.12 யுக்தன்,
கர்மபலனை துறந்து நித்திய
கர்மத்திலிருந்து வருகின்ற சாந்தியை அடைகிறான். யோகம் பயிலாதவன் ஆசையால் தூண்டப்பட்டு,
பலனில் பற்றுவைத்து
பந்தப்படுகிறான்.
(யுக்தன் என்றால்
கடமைகளை முறையாக செய்து முடித்து,கர்மங்களை கடந்த
நிலையை அடைந்தவன்)
-
5.13 உடலை
அடக்கியவன், எல்லா
கர்மங்களையும் மனதால் விலக்கிவிட்டு ஒன்றும் செய்யாதவனாக ஒன்பது துவாரங்களையுடைய
உடலில் (கண் 2, நாசி 2,வாய் 1, காது 2,சிறுநீர் 1,மல துவாரம் 1) சுகமாக
இருக்கிறான்
-
5.14 இறைவன்
உலகின் செயலுக்கு கர்த்தா அல்ல, கர்மங்களை
செய்வதில்லை, கர்ம பலனோடு
பற்று வைப்பதையும் உண்டுபண்ணவில்லை.
ஸ்வபாவத்தால் (சத்வ,ரஜஸ்,தமஸ் என்ற முக்குணத்தால்
உதித்த இயற்கையால்) தான் இங்ஙனம் நடக்கிறது
-
5.15 எங்கும்
நிறைந்துள்ள (பிரம்மம்) ஒருவனுடைய பாபத்தை
பெற்றுக்கொள்வதில்லை. புண்ணியத்தையும் வாங்கிக்கொள்ளவதில்லை. அறியாமையால் அறிவு
மூடப்பட்டுள்ளது. ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன.
-
5.16 ஆனால் தன்னுடைய
ஞானத்தால் யாருடைய அஞ்ஞானம் அழிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு அந்த ஞானம் சூரியன்போன்று
மேலானதைப் பிரகாசிக்கச்செய்கின்றது
-
5.17
ஆதியில்(பிரம்மத்தில்) புத்தியை வைப்பவர்கள் அதையே(பிரம்மத்தை) தங்கள் ஸ்வரூபமாக
கொண்டவர்கள், அதிலேயே உறுதியாக
இருப்பவர்கள், அதையே
புகலிடமாகக்கொண்டவர்கள், ஞானத்தால்
பாபங்களை போக்கிக்கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை
-
5.18 பண்டிதர்கள்,
கல்வியும் பணிவும்
பொருந்திய பிராமணர்களிடத்தும்( பிரமத்தை உணர்ந்தவர்கள்), பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், நாயை சமைத்து உண்ணும் (பண்பாடற்ற) மனிதனிடமும்
சமமான பார்வை உள்ளவனாக இருப்பான் (ஏற்றத்தாழ்வு பார்க்கமாட்டான்)
-
5.19 யாருடைய மனமானது
சமநிலையில் உறுதியாயிருக்கிறதோ அவர்களால் இங்கேயே (இப்பிறப்பிலேயே) பிறப்பு இறப்பு
ஜயிக்கப்பட்டது. உண்மையில் பிரம்மம் ஸமமானது, தோசமற்றது. ஆகையால் அவர்கள் பிரம்மத்தில்
நிலைத்திருக்கிறார்கள்.
-
5.20 பிரம்மத்தை
அறிந்தவன் பிரம்மத்தில் நிலைபெற்றவன், உறுதியான அறிவுடையவன் மனக்குழப்பம் அடையாதவன், தனக்கு விருப்பமானது
வரும்போது மகிழ்வதில்லை, விப்பமில்லாதது
வரும்போது துன்பப்படுவதில்லை
-
5.21 வெளிவிஷயங்களில்
பற்றில்லாதவன், தன்னில் அந்த
சுகத்தை அடைகிறான். அவன் பிரம்மசமாதியில் நிலைபெற்றவன்.அழியாத சுகத்தை அடைகிறான்
-
5.22 குந்தியின்
மைந்தா, எவை உண்மையில்
இந்திரியவிஷயங்களில்(கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்) தோன்றிய இன்பங்களோ,
அவைகள்தான் துன்பத்திற்கு
காரணமானவைகள். தோற்றமும் முடிவும் உள்ள அவைகளில் ஞானி இன்புறுவதில்லை
-
5.23 யார் உடலை
விடுவதற்கு முன்பு, காமம்,கோபம் இவைகளில் உண்டாகும்
வேகத்தை பொறுத்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டானோ அவன் யுக்தன். அவனே
சுகத்தை அனுபவிப்பவன்.
-
5.24 யார் தன்னில்
சுகத்தை அனுபவிக்கிறானோ,தன்னில்
விளையாடுகிறானோ மேலும் யார் தன்னுள் ஒளியை காண்கிறானோ, அந்த யோகியே பிரம்மாகி, பிரம்மநிர்வாணத்தை அடைகிறான்.
-
5.25 பாபங்களைப்
போக்கிக்கொண்டவர்கள், சந்தேகங்களை
அகற்றியவர்கள், மனதை
அடக்கியவர்கள், எல்லா உயிர்களின்
நன்மையில் மகிழ்ச்சியடையும் ரிஷிகள், பிரம்மநிர்வாணத்தை அடைகிறார்கள்
-
5.26 காமம், கோபம் இவைகளிலிருந்து
விடுபட்டவர்கள் மனம் அடங்கியவர்கள், தன்னை அறிந்தவர்கள், அனைத்தையும் துறந்வர்களுக்கு எப்போதும்
பிரம்மநிர்வாணம் கிடைக்கிறது
-
5.27,28 வெளிவிஷயங்களை வெளியில் நிறுத்தி, கண்களை புருவமத்தியில்
நிறுத்தி, நாசியின் வழியாக
சஞ்சரிக்கின்ற பிராண அபான வாயுக்களை சமப்படுத்தி இந்திரியம், மனம், புத்தி இவைகளை அடக்கி,
முக்தியை குறிக்கோளாகக்
கொண்டு ஆசை, பயம், கோபம் இவைகளை விட்டு,
யார் முனிவனாய்
இருக்கிறானோ அவன் எப்பொழுதும் முக்தனே
-
5.29 நான் யக்ஞம்,
தபசு இவைகளை
அனுபவிப்பவன். எப்பொழுதும் எல்லா உயிர்களுக்கும் ஈஸ்வரன்(ஆள்பவன்) என்றும்,
எல்லா உயிர்களின்
சுகத்தில் அக்கரை கொண்டவன் என்றும் என்னை அறிந்து (முனிவன்) சாந்தியை அடைகிறான்
---
Excellent.
ReplyDelete