Friday, 27 October 2017

Bhagavad Gita in Tamil - Chapter 9

Bhagavad Gita in Tamil - Chapter 9


ஸ்ரீமத் பகவத்கீதை
-
அத்தியாயம்-9
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
9.1 எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடுகூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தை, பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்துரைக்கிறேன்
-
9.2 இந்த ஞானம், வித்தைகளில் மேலானது. மேலான மறைபொருள். தூய்மைதருவதில் தலைசிறந்தது. கண்கூடாக உணர்வதற்கு கடினமானது. தர்மத்தோடு கூடியது. செய்வதற்கு மிக உளிது. அழிவற்றது
-
9.3 எதிரிகளை வாட்டுபவனே, இந்த தர்மத்தில் சிரத்தையில்லாத மனிதர்கள் என்னை அடையாமல், மரண சம்சார மார்க்கத்திற்கு திரும்பிவருகின்றனர்
-
9.4 இந்திரியங்களுக்கு புலப்படாதவனாகிய என்னால் இவ்வுலகம்யாவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது. உயிரனைத்தும் என்னிடத்திலிருக்கின்றன. நான் அவைகளிடத்தில் இல்லை
-
9.5 பூதங்கள் என்னிடத்தில் நிற்பவைகளல்ல, என்னுடைய ஈஸ்வரயோக சிறப்பை பார். என் ஆத்மா பூதங்களை தாங்குகிறது. பூதங்களை உண்டுபண்ணுகிறது. ஆனால் பூதங்களின் வசத்தில் இல்லை.
-
9.6 எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங்காற்று வானத்தில் நிலைபெற்றிருப்பது போன்று பூதங்களெல்லாம் என்னிடத்தில் இருக்கிறதென்று தெரிந்துகொள்
-
9.7 குந்தியின் புதல்வா, எல்லா பூதங்களும் கல்பமுடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கல்பம் துவங்கும்போது அவைகளை நான் தோற்றுவிக்கிறேன்.
-
9.8 என்னுடைய பிரகிருதியை அருள் உடையதாகசிசெய்து, தன்வசமில்லாது பிரகிருதியின் வசத்திலிருக்கின்ற இந்த முழு உயிர்வகைகளையும் திரும்பத்திரும்ப படைக்கிறேன்.
-
9.9 தனஞ்ஜயா, கர்மங்களில் பற்றற்றவனான உதாசீனனைப்போன்று உட்கார்ந்திருப்பவனான என்னை அந்த கர்மங்கள் (பிரகிருதியின் கர்மங்கள்) பந்தப்படுத்துவதில்லை
-
9.10 குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப்பெற்று பிரகிருதியானது. அசையும், அசையாதவைகளை (உயிரினங்கள்,உலகங்கள் போன்றவை) சிருஷ்டிக்கிறது. இதன் காரணத்தினால் பிரபஞ்சமானது சுழல்கிறது.
-
9.11 உயிர்களுக்கு ஈஸ்வரனான என்னுடைய மேலான இயல்பை அறியாத மூடர்கள் மானுட உடலை எடுத்துள்ள என்னை அவமதிக்கிறார்கள்.
-
9.12 வீண் ஆசையுடையவர்கள், பண்பாடற்ற செயல்களை செய்பவர்கள், கோணலறிவுடையவர்கள், விவேகமில்லாதவர்கள், மோஹமடைந்த ராக்ஷச அசுர இயல்பை அடைகின்றனர்.
-
9.13 பார்த்தா, ஆனால் மஹாத்மாக்கள் தெய்வீக இயல்பை அடைந்தவர்களாய் வேறு எதிலும் பற்றுவைக்காதவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும் அழியாதவனும் நான் என்று என்னை அறிந்து வழிபடுகிறார்கள்.
-
9.14 எப்பொழுதும் என்னை புகழ்பவராய், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் நமஸ்கரிப்பவர்களாயும் நித்தியயோகிகள் என்னை வணங்குகிறார்கள்.
-
9.15 சிலர் ஞானயக்ஞத்தால்  ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனைவிதங்களில் என்னை வழிபடுகின்றனர்
-
9.16 நானே கிரது (வேதத்தில் கூறப்பட்ட கர்மம்) நானே யக்ஞம், நானே ஸ்வதா (முன்னோர்களுக்கு படைக்கும் உணவு) நானே ஔஷதம் (மருந்தாக பயன்படும் உணவு) நானே மந்திரம், நானே நெய், நானே அக்கினி, நானே வேண்டுதல்.
(யாகம் செய்ய மேலே கூறப்பட்ட அனைத்தும் தேவை. இவை அனைத்துமாக நானே ஆகியிருக்கிறேன் என்கிறார் பகவான்)
-
9.17 நானே இந்த ஜகத்தின் தந்தை,தாய்,கர்மபலனை கொடுப்பவன். பாட்டன். அறியத்தக்கவன்,தூய்மைசெய்பவன், ஓங்காரம், ரிக்,சாம,யஜுர் வேதமும்
-
9.18 (நானே) புகலிடம், வளர்ப்பவன், தலைவன், சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம், தோழன், பிறப்பிடம், பிரளயம், தங்குமிடம், களஞ்சியம், அழியாத வித்து
-
9.19 அர்ஜுனா, நான் வெப்பம் தருகிறேன். நான் மழையை பெய்விக்கவும், தடுக்கவும் செய்கிறேன். சாவும், சாகாதன்மையும், நிலையானதும், நிலையற்றதும் நானே.
-
9.20 மூன்று வேதங்களை அறிந்தவர். யாகங்களால் என்னை பூஜித்து, சோமபானம் செய்தவர்கள், பாபத்திலிருந்து விடுபட்டவர்கள், சொர்க்கம் செல்வதை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தை அடைந்து, சுவர்க்கத்தில் திவ்யமான தேவபோகங்களை அனுபவிக்கின்றனர்.
-
9.21 அவர்கள் அந்த விசாலமான ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் தீர்ந்த பின்பு, மனித உலகத்திற்குள் புகுகின்றனர். இங்ஙனம் மூன்று வேத தர்மத்தை பின்பற்றுபவர்கள், போகத்தில் பித்தேறியவர்களாய், பிறப்பு இறப்பு என பல பிறவிகளை அடைகிறார்கள்.
-
9.22 எனக்கு வேண்டப்பட்டவராய், என்னை எப்போதும் நினைத்துக்கொண்டு, எப்போதும் என்னை வணங்கும் நித்தியயோகிக்கு, யோகநலனை(யோகம் கைக்கூட உதவுகிறேன்) நான் வழங்குகிறேன்.
-
9.23 குந்தியின் மைந்தா, சிரத்தையோடுகூடிய எந்த பக்தர்கள் மற்ற தேவதைகளையும் வணங்குகிறார்களோ அவர்களும் விதிவழுவியவர்களாய் என்னையே வணங்குகிறார்கள்.
-
9.24 நிச்சயமாக நானே எல்லா யாகங்களினுடைய போக்தாவாகவும்(அனுபவிப்பவனாகவும்) பிரபுவாகவும் (தலைவனாகவும்) இருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி அறிவதில்லை. ஆகையால் பாதை தவறுகிறார்கள் (முற்காலத்தில் பல தேவர்களுக்கு யாகங்களும், வழிபாடுகளும் நடந்தது)
-
9.25 தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகிறார்கள் (சுவர்க்கம் செல்கிறார்கள்) பித்ருக்களை (வீட்டில் முன்பு இறந்த முன்னோர்) வணங்குபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் (பித்ருக்கள் வாழும் உலகை அடைகிறார்கள்) பூதங்களை வணங்குபவர்கள் ( தீமை செய்யும் ஆவிகள்,பில்லி சூன்யம் போன்றவைகளுக்கு இந்த தீயஆவிகளை பயன்படுத்துகிறார்கள்) பூதங்களை போய் சேர்கிறார்கள் (பூதங்கள் இருள் நிறைந்த நரகத்தில் வாழ்கின்றன) என்னை வணங்குபவர்கள் என்னை அடைகிறார்கள் (முக்திபெறுகிறார்கள்)
-
9.26 யார் எனக்கு பக்தியோடு இலை, மலர், கனி, நீர் அளிக்கிறானோ,அவன் பக்தியுடன் தரும் அன்பளிப்பை நான் பிரத்யாத்மனாக (அவன் அகத்துள் இருந்துகொண்டு)  ஏற்றுக்கொள்கிறேன்
-
9.27 குந்தியின் புதல்வா, எதைச் செய்யினும்,எதை புசிக்கினும், எதை ஹோமம் செய்தாலும், எதை கொடுத்தாலும், எந்த தவத்தை செய்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாக செய்
-
9.28  இங்ஙனம் நன்மை,தீமையை தருகின்ற கர்மபந்தங்களிலிருந்து விடுபடுவாய். சந்நியாசயோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்து, வினையினின்னு விடுபட்டு என்னை அடைவாய்
-
9.29 நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாக இருக்கிறேன். எனக்கு நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. யார் என்னை பக்தியோடு பூஜிக்கிறார்களோ, அவர்கள் என்னிடத்தில் உள்ளார்கள். நான் அவர்களிடத்தில் உள்ளேன்
-
9.30 (முன்பு) தீயவனாக இருந்தாலும்கூட, வேறு ஒன்றையும் எண்ணாமல் என்னை எப்போதும் பூஜிப்பானானால் அவன் சாது என்றே கருதப்படவேண்டும். ஏனென்றால் அவன் நன்கு தன்னில் நிலைபெற்றவனாகிறான்.
-
9.31 விரைவில் தர்மத்தில் நிலைபெற்றவனாகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் அழிவதில்லை என்று தெரிந்துகொள்
-
9.32 பார்த்தா, கீழான பிறவியுடைய பெண்கள்(அந்த காலத்தில் பெண்கள், ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் என கருதப்பட்டிருக்கிறார்கள்), வைசியர்(விவசாயி,வியாபாரி),சூத்திரர்(வேலைக்காரர்) ஆகியவரும் என்னை சார்ந்திருந்து நிச்சயமாக மேலானநிலையை அடைகிறார்கள்
-
9.33 புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராமணர்களும் (பிரம்மத்தை அடைய தவம்செய்பவர்) அப்படியே ராஜரிஷிகளும்(ராஜாவாக இருந்து அதைவிட்டுவிட்டு தவம்செய்பவர்கள்) எளிதில் பெறுவர்கள்.
-
9.34 மனதை என்னிடத்தில் வைத்து, என்னிடத்தில் பக்தியுள்ளவனாய் எனக்காக யாகம் செய்பவனாய் ஆவாயாக. என்னை நமஸ்கரி, இங்ஙனம் என்னை அடைவதையே குறிக்கோளாக கொண்டு உன்னை உறுதிப்படுத்திக்கொள் என்னையே அடைவாய்

-

No comments:

Post a Comment

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture ...