Friday, 27 October 2017

Bhagavad Gita in Tamil - Chapter 13

Bhagavad Gita in Tamil - Chapter 13


ஸ்ரீமத்பகவத்கீதை
-
அத்தியாயம்-13
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. யார் இந்த உடலை அறிகிறானோ அவன் சேத்திரக்ஞன் என்று  சொல்லப்படுகிறான்
-
13.2 அர்ஜுனா எல்லா சேத்திரங்களிலும் (உடல்களிலும்) என்னை சேத்திரக்ஞன்(எல்லா உடலை அறிபவன்) என்று அறிந்துகொள். சேத்திரம், சேத்திரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என்னுடைய கொள்கை
-
13.3 அந்த சேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த சேத்திரக்ஞன் யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்
-
13.4 இவ்வுண்மை ரிஷிகளால் விதவிதமான சந்தங்களால் பாங்காக பலவகைகளில் பாடப்பெற்றிருக்கிறது. நிச்சய புத்தியை தந்து பிரம்மத்தை குறிக்கின்ற பதங்களாலும் பாடப்பட்டுள்ளது.
-
13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி, அவ்யக்தம், இந்திரியங்கள் பத்து மற்றும் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்தும் விருப்பு,வெறுப்பு,சுகம்,துக்கம், உடலை இணைத்திருப்பது,அறிவு,மனவுறுதி இவைகள் வேறுபாடுகளோடு கூடிய சேத்திரம்
(மஹாபூதங்கள்(5)- ஆகாயம்,வாயு,அக்கினி,அப்பு,பிருத்துவி, அகங்காரம்(1)- நான் இருக்கிறேன் என்ற உணர்வு. புத்தி(1)- மஹத் அல்லது பிரபஞ்சமனம். அவ்யக்தம்(1)-மூலப்பொருட்கள் தோன்றாநிலை.  பத்து இந்திரியங்கள்- கண்,காது,நாக்கு,மூக்கு,தோல் ஆகிய 5 ஞானஇந்திரியங்கள் .வாக்கு, கை , கால் ,குதம், குறி இந்த 5 கர்மேந்திரியங்கள். இந்திரியார்த்தங்கள்(5) - சப்த,ஸ்பர்ச,ரூப,ரச,கந்த அதாவது ஒலி,தொடுதல்,ஒளி,சுவை,மணம் இந்த ஐந்தும் இந்திரியார்த்தங்கள். ஒன்று(1) -உடலுள் உறைபவன் அல்லது ஆன்மா அல்லது புருஷன். இவைகள் சாங்கிய தத்துவம் கூறும் 24 தத்துவங்கள்)
-
13.7 தற்பெருமையின்மை, செருக்கின்மை,அஹிம்சை,பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி,தன்னடக்கம்
-
13.8 இந்திரிய போக விஷயங்களில் விருப்பமின்மை (பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,தொடுதல்,நுகர்தல்) அகங்காரமின்மை, பிறப்பு இறப்பு மூப்பு பிணி துயரம் ஆகியவைகளில் உள்ள கேடுகளை எண்ணிப்பார்த்தல்
-
13.9 பற்றின்மை, மகன் மனைவி வீட்டைத் தனதென்று நினையாமலிருத்தல், விருப்பமானவை வரும்போதும், விரும்பாதது வரும்போதும் எப்பொழுதும் மனம் நடுநிலையில் நிற்பது
-
13.10 என்னிடத்திலிருந்து(இறைவனிடமிருந்து) எதையும் எதிர்பார்க்காத யோகத்தால் என்னிடம் தொடர்ந்து பக்திசெய்தல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தில் விருப்பமின்மை
-
13.11 ஆத்மஞானத்தில் நிலைபெறுதல், தத்துவஞானத்தின் பலனை ஆராய்தல். இவையாவும் ஞானம் என்று சொல்லப்படுகிறது. எது இதற்கு அன்னியமானதோ அது அக்ஞானம்
-
13.12 எது ஞேயம்(அறியத்தக்கது) எதை அறிந்து சாகாத்தன்மையை அடைகிறானோ அதை சொல்கிறேன். அது ஆதியில்லாதது,மேலானது,அது பிரம்மம். உள்ளது என்றும் சொல்லமுடியாது,இல்லை என்றும் சொல்லமுடியாதது.
-
13.13 அது எங்கும் கை கால்களை உடையது, எங்கும் கண்.தலை.வாய்களை உடையது. எங்கும் கால்களையுடையது. உலகில் எங்கும் வியாபித்து நிற்கிறது
-
13.14 எல்லா இந்திரியங்கள் மூலமாகவும் ஒளிர்வது, இந்திரியங்கள் எதவும் இல்லாதது. பற்றற்து, அனைத்தையும் தாங்குவது, குணமற்றது,குணங்களை அனுபவிப்பது
-
13.15 அது பூதங்களுக்கு (உலகில் உள்ள அனைத்திற்கும்) உள்ளும் புறமும் அசையாததும்,அசைவற்றதும் ஆகும். சூட்சுமமாக இருப்பதால் அறியமுடியாதது, (அது) தூரத்தில் இருப்பது,(அது) அருகில் இருப்பது
-
13.16 பொருட்களில் சேர்ந்தே இருப்பதாகவும்,பிரிவுபடாதது போலும் இருக்கிறது. பூதங்களைத் தாங்குவதும்,விழுங்குவதும் உண்டுபண்ணுவதும் அது என்று அறி
-
13.17 ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது.ஞானமாகவும்(அறிவு), ஞேயமாகவும் (அறியப்படும்பொருள்) அறிவினால் அடையப்படுவதுமாகிய அது எல்லோருடைய ஹிருதயத்தில் நிலைத்திருக்கிறது
-
13.18 இவ்வாறு சேத்திரமும் அவ்வாறே ஞானமும் ஞேயமும் சுருக்கமாக சொல்லப்பட்டது. இதை அறிந்து என்பக்தன், என்நிலையை அடைய தகுந்தவனாகிறான்
-
13.19  பிரகிருதியையும்,புருஷனையும் இவ்விரண்டையும் ஆதியில்லாதவைகள் என்று அறிக. பல்வேறு தோற்றங்களும் குணங்களும் பிரகிருதியில் பிறந்தவைகள் என அறிக
-
13.20 கார்யத்தையும், காரணத்தையும் உண்டுபண்ணும் விஷயத்தில், பிரகிருதி காரணமென்று சொல்லப்படுகிறது. புருஷன் சுகதுகக்ங்களை அனுபவிப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது
-
13.21 புருஷன் பிரகிருதியில் பிறந்த குணங்களை அனுபவிக்கிறான். அவனுக்கு நலம்,கேடு உடைய யோனிகளில் பிறப்பதற்கு குணப்பற்றுதலே காரணம்
-
13.22 இந்த தேகத்தில் மேலாக இருப்பவன் சாட்சி, அனுமதிப்பவன்,தாங்குபவன், அனுபவிப்பவன்,மஹேச்வரன்,பரமாத்மா இப்படியெல்லாம் சொல்லப்படுகிறான்
-
13.23 யார் இங்ஙனம் புருஷனையும் குணங்களுடன் கூடிய பிரகிருதியையும் அறிகிறானோ, அவன் எவ்வாறு வாழ்பவனாக இருப்பினும் திரும்பவும் பிறப்பதில்லை
-
13.24 சிலர் தியானத்தால் தன்னை தெளிவாக்கி, தன்னை தனக்குள்ளே காண்கிறார்கள். வேறுசிலர் சாங்கியயோகத்தாலும் இன்னும் சிலர் கர்மயோகத்தாலும்
-
13.24 இன்னும் சிலர் இவ்வாறு அறியாதவர்களானாலும் பிறரிடமிருந்து கேட்டு அறிந்து பின்பற்றுகிறார்கள். அவர்களும் கேட்ட உபதேசத்தில் நம்பிக்கை வைத்து மரணத்தை நிச்சயமாக கடக்கின்றனர்
-
13.26 பரத சிரேஷ்டா, தோன்றியுள்ள,இயங்கும் மற்றும் இயங்காத பொருட்கள் அனைத்தும் சேத்திர சேத்திரக்ஞனுடைய சேர்க்கையால் உண்டானது என்று அறி
-
13.27 எல்லா பூதங்களிலும் (உயிர்கள் உட்பட அனைத்தும்) ஸமமாக இருக்கிறவனும்,அழிவனவற்றுள் அழியாதவனுமாகிய பரமேஸ்வரனை யார் பார்க்கிறானோ அவனே (உண்மையை) பார்க்கிறான்
-
13.28 எங்கும் சமப் பார்வையுடையவன் அனைத்து இடங்களிலும் சமமாக நிலைத்திருக்கும் ஈசுவரனை பார்த்து, தன்னை தன்னால் அழித்துக்கொள்வதில்லை (அவன் அனைத்து இடங்களிலும் தன்னையே காண்கிறான்) அதனால் அவன் மேலான நிலையை அடைகிறான்
-
13.29 பிரகிருதியினாலேயே எல்லா கர்மங்களும் செய்யப்படுகின்றன.மேலும் தான் செயலற்றவன் என்றும் யார் பார்க்கிறானோ அவனே உண்மையை பார்க்கிறான்
-
13.30 எப்பொழுது பல்வேறு உயிர்கள் யாவும் ஒன்றிலிருப்பதையும், அந்த ஒன்றிலிருந்தே விரிவடைந்திருப்பதையும் காண்கிறானோ அப்பொழுது பிரம்மமாக ஆகிறான்
-
13.31 குந்திபுத்திரா. ஆதியில்லாததாலும்,குணமில்லாததாலும்,அந்த அழிவில்லாத பரமாத்மா சரீரத்தில் இருப்பினும் கர்மம் செய்வதில்லை கர்மத்தில் பற்றுவைப்பதில்லை
-
13.32 எப்படி எங்கும் வியாபித்துள்ள ஆகாசம் சூட்சுமமாயிருப்பதால் களங்கமடைவதில்லையோ,அப்படியே எங்கும், உடல்முழுவதும் நிறைந்திருக்கின்ற ஆத்மா களங்கமடைவதில்லை
-
13.33 அர்ஜுனா எப்படி ஒரு சூரியன் இந்த உலகத்தை பிரகாசமடையச்செய்கிறாளோ அப்படி சேத்திரத்தில் வீற்றிருக்கின்ற ஆத்மா சேத்திரம்(உடல்) முழுவதையும் பிரகாசிக்கின்றது
-
13.34 இவ்வாறு சேத்திர சேத்திரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமைகளையும், உயிர்கள் பிரகிருதியிருந்து விடுதலையடைதலையும் ஞானக்கண்ணால் யார் அறிகிறார்களோ அவர்கள் மேலானதை (பிரம்மத்தை) அடைகிறார்கள்
-

பதிமூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது

No comments:

Post a Comment

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture ...