Friday 10 November 2017

Bhagavad Gita in Tamil - Chapter 17

Bhagavad Gita in Tamil - Chapter 17



ஸ்ரீமத்பகவத்கீதை
-
அத்தியாயம்-17
-
அர்ஜுனன் சொன்னது
-
17.1.கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியைமீறி ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ, அவர்களுடைய நிலை எத்தகையது? சத்துவமா? ராஜஸமா? அல்லது தாமஸமா?
-
17.2.ஸ்ரீபகவான் சொன்னது
தேகிகளுக்கு இயல்பாக உண்டான அந்த சிரத்தையானது,சாத்விகம்,ராஜஸம், தாமஸம் என மூன்றுவிதமாக இருக்கிறது.அதைக்கேள்
-
17.3 பரதகுலத்தில் உதித்தவனே, ஒவ்வொருவருடைய சிரத்தையானது,அந்தக்கரணத்தில் ஏற்பட்ட சம்ஸ்காரத்தை அனுசரித்தாக இருக்கிறது. இந்த ஜீவன் சிரத்தைமயமானவன். யார் எப்படிப்பட்ட சிரத்தையுடையனோ, அவன் அந்த சிரத்தைகேற்றவனாகிறான்
-
17.4 சாத்துவிகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்.ரஜோகுணமுடையவர்கள் யக்ஷர்களையும்,ராக்ஷசர்களையும் வணங்குகிறார்கள்.தாமஸமுடையவர்கள் பிரேதங்களையும்,பூத கணங்களையும் வணங்குகிறார்கள்
-
17.5,6 வீம்பும்,அகங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் உடையவர்களாய், எந்த அறிவற்றவர்கள் உடலிலுள்ள இந்திரியங்களையும், சரீரத்தில் வீற்றிருக்கும் என்னையும் துன்புறுத்தி, சாஸ்திரத்தில்  விதிக்கப்படாத கோரமான தபசை செய்கிறார்களோ அவர்களை அசுரவழியில் செல்பவர்கள் என்று அறி
-
17.7 ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவும் மூன்றுவிதமாக இருக்கிறது. அங்ஙனமே யக்ஞமும்,தபசும்,தானமும் மூன்று விதமாக உள்ளன.அவைகளை கேள்
-
17.8 ஆயுள்,அறிவு.பலம்,ஆரோக்கியம்,சுகம்,விருப்பம் ஆகியவைகளை  உண்டுபண்ணுபவைரசமுள்ளவைகள்,பசையுள்ளவைகள்,வலிவு தருபவைகள்,இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்கு பிரியமானவைகள்.
-
17.9 கசப்பு,புளிப்பு,உவர்ப்பு,அதிக உஷ்ணம்,காரம், உலர்ந்தவை, எரிச்சலூட்டுபவை,துக்கத்தையும்,சோகத்தையும்,நோயையும் உண்டுபண்ணுபவையான ஆகாரங்கள் ரஜோகுணமுடையவர்களுக்கு பிடித்தமானவை
-
17.10 பொழுது கழிந்த, சுவையிழந்த, நுர்நாற்றமெடுத்த,பழைய,எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோகுணத்தினருக்கு பிரியமானது
-
17.11 வினைப்பயனை விரும்பாதவர்களாய், வழிபாடாக செய்தேயாக வேண்டும் என்று மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டு, சாஸ்திர ஆணைப்படி எந்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது ஸாத்விகமானது
-
17.12 பரதகுலத்தில் சிறந்தவனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ எது செய்யப்படுகிறதோ அந்த யக்ஞத்தை ராஜஸமானதென்று அறிந்துகொள்
-
17.13 வேதநெறி வழுவி,அன்னதானமில்லாது,மந்திரமில்லாது,தக்ஷிணையிலில்லாமல்,சிரத்தையில்லாமல் செய்யப்படும் யக்ஞம் தாமஸம் என்று சொல்லப்படுகிறது
-
17.14 தேவர்,பிராமணர்,குருமார்,ஞானிகள் ஆகியவர்களைப் போற்றுவதும்,தூய்மையும், நேர்மையும், பிரம்மச்சர்யமும், அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவம் என சொல்லப்படுகிறது
-
17.15 துன்புறுத்தாத உண்மையும், இனிமையும், நலனுடன்கூடிய வார்த்தை மற்றும் வேதம் ஓதுதல்,இது வாக்குமயமான தபம் என்று சொல்லப்படுகிறது
-
17.16 மனஅமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், தூயநோக்கம் இது மானஸ தபசு என்று சொல்லப்படுகிறது
-
17.17 பயனை விரும்பாதவரும்,யோகத்தில் உறுதிபெற்றவருமான மனிதர்களால் பெருமுயற்சியுடன் செய்யப்படும் இம்மூன்றுவித தபசு சாத்வீகமானதென்று சொல்லப்படுகிறது
-
17.18 பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் முன்னிட்டுஆடம்பரத்தோடு  எந்த தபம் செய்யப்படுகிறதோ, தற்காலிகமானதும், உறுதியற்றதுமான அது ராஜஸமானதென்று சொல்லப்படுகிறது
-
17.19 மூடக்கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படுகின்ற தபம் தாமஸம் என்று சொல்லப்படுகிறது
-
17.20 தக்க இடத்தில், தகுந்த வேளையில், பிரதியுபகாரம் செய்யமாட்டார்கள் என தெரிந்தும் , தகுந்த தகுதியுள்ளவர்களுக்கு,கடமை என கருதிகொடுக்கும் தானம் சாத்வீகமானது
-
17.21  பிரதிபலனை எதிர்பார்த்து, பலனை கருதி, மேலும் வருத்தத்தோடு தரப்படுகின்ற தானம் ராஜஸம் என சொல்லப்படுகிறது
-
17.22 தகாத இடத்திலும்,காலத்திலும்,தகுதியற்றவர்களுக்கு வணகக்மின்றி,இகழ்ச்சியுடன் செய்யப்படும் தானம் எதுவோ அது தாமஸமெனப்படுகிறது
-
17.23ஓம் தத் ஸத்” (பிரம்மம் அதுஒன்றே நிலைத்திருப்பது) என்று பிரம்மம் மூன்றுவிதமாய் கூறப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பிராமணர்களும்,வேதங்களும்,யாகங்களும் பண்டைய காலத்தில் வகுக்கப்பட்டது
-
17.24 ஆகையால் வேதமறிந்தவர்கள் வேதவிதிப்படி செய்யம் யக்ஞம்,தானம்,தபம் போன்றவைகள் துவங்கும் போதுஓம் என்று உச்சரிக்கின்றனர்.
-
17.25தத்” (தத் என்றால் அது,அது என்பது பிரம்மம்) என்று உசச்ரித்து  பலனை விரும்பாது மோக்ஷத்தை நாடுபவர்களால்  பலவிதமான,யக்ஞம்,தபமும், தானமும் செய்யப்படுகின்றன
-
17.26 அர்ஜுனா, உண்மையென்ற கருத்திலும்,நன்மையென்ற கருத்திலும் ஸத்என்ற சொல் வழங்கப்படுகிறது. மங்கல கர்மங்களில் ஸத்என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது
-
17.27 யக்ஞத்திலும்,தவத்திலும்,தானத்திலும் நிலைத்திருப்பது ஸத்என்று சொல்லப்படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டு செய்யப்படும் கர்மமும் ஸத்என்றே சொல்லப்படுகிறது
-
17.28 சிரத்தையின்றிச் செய்யும் யாகமும்,தானமும்,தபமும் மற்ற கர்மமும் அஸத்எனப்படும். அர்ஜுனா,அது மறுமைக்கும் உதவாது.இம்மைக்கும் உதவாது
-

அத்தியாயம் பதினேழு நிறைவுற்றது-

No comments:

Post a Comment

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture

Srimad Bhagavad Gita in Tamil Chapter-18 picture ...